கர்ப்பிணித் தாய்மாருக்கு மேலதிகமாக 2,500 ரூபாவை வழங்குவதாக ஏமாற்றும் செயல்!

114 0

கர்ப்பிணித்  தாய்மாருக்கு கிடைக்கப்பெறாத 20,000 ரூபாவுக்கு மேலதிகமாக 2,500 ரூபாவை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளமை நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு செயற்படாகும்.

கொடுப்பனவு வழங்கப்படாமை குறித்து ஜனாதிபதி ஒன்று அறிந்திருக்கவில்லை,அல்லது பொய்யுரைக்கும் ஆளும் தரப்புடன் ஒன்றிணைந்து பொய்யுரைத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறு கையில்,

அரசியல்வாதிகளின் தேவைக்கமையவே நாட்டில்  நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.சமுர்த்தி உள்ளிட்ட ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் அவ்வாறானதாக காணப்படுகின்றன.தற்போதைய நெருக்கடியிலான சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கிற்காக செயற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணித்  தாய்மார்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 20,000 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் மேலதிகமாக 2500 ரூபாவை வழங்குவதாக நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

கர்ப்பிணித்  தாய்மார்களுக்கு 2,500 ரூபா அல்ல,20,000ஆயிரம் ரூபா கொடுப்பனவு கூட தற்போது கிடைக்கப்பெறுவதில்லை,இதனை  நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறியவில்லையா அல்லது பொய்யுரைக்கும் தரப்பினருடன் ஒன்றிணைந்து பொய்யுரைக்கிறாரா,

கர்ப்பிணி தாய்மார்களுக்கான கொடுப்பனவை 22,500 ரூபாவாக வழங்குவதை வரவேற்கிறோம்.இருப்பினும் அவ்வாறு எங்கும் வழங்கப்படவில்லை. வழங்கப்படாத 20,000 ரூபாவுடன் ஒன்றிணைத்து மேலதிகமாக 2,500 ரூபாவை வழங்குவதாக குறிப்பிட்டு  2019ஆம் ஆண்டு நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையா எடுக்கப்படுகிறது.அல்லது ஜனாதிபதி நாட்டு மக்களை ஏமாற்றும்  நடவடிக்கையை முன்னெடுத்துள்ளரா என்றார்.