சொத்து குவிப்பு வழக்கில் ஜெயாவின் பெயர் நீக்கம்

306 0

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அவர் மரணமடைந்த நிலையில் இவர் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை மறுதினம் வெளியிடப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்க தலைமை நீதிபதி ராம்குமாருக்கு 200 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்ட பஞ்சாயத்து இயக்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி இவ்வாறு பணம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தற்போது அரசியல் களம் தீர்க்கமான நிலையை அடைந்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலமைச்சராக யார் தெரிவாவார்கள் என்ற அதிகார போட்டி நிலவிவரும் நிலையில், கட்சியை பிளவு
படுத்தவே, தமிழக பொறுப்பு ஆளுநர் காலதாமதம் செய்கிறார் என வி.கே சசிகலா குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டவிரோதமாக காஞ்சிபுரம் கூவத்தூரில் அஇஅதிமுகா சட்ட மன்ற உறுப்பினர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நேற்றைய தினம் அவர்களை சந்தித்த சசிகலா, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, நேற்று வரையில் பொறுத்துவிட்டதாகவும் இன்று தொடக்கம் புதிய வடிவிலான போராட்டம் இடம்பெறும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நேற்றைய தினம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமிர்த்தம் இடம்பெற்றதாக ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பினை அடுத்து கருத்து வெளியிட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி, சசிக்கலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கினை கருத்தில் கொள்ளாது சட்ட விதிமுறைகளுக்கு அமைய சசிக்கலாவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதனிடையே, போயஸ் காடனை நினைவிடமாக மாற்றக் கோரும் கையழுத்து திரட்டும் இயக்கம் நேற்று ஆரம்பமானது.

முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம் இதில் முதல் கையெழுத்திட்டு இதனை ஆரம்பித்து வைத்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.