அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் திண்டாடும் இலங்கை மக்கள்

127 0

எனது தந்தை இறந்து 3 மாதங்கள். கணவன் இறந்து ஒரு மாதமாகிறது. எனக்கு 3 பிள்ளைகள். ஒரு நாளைக்கு 1000 ரூபா என்பது சிரமமானது. தோட்ட தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல. கணவர் இறந்த போது தோட்ட மக்கள் உதவி செய்தார்கள். தற்போது சகலருக்கும் பிரச்சினை உள்ளது. எவரிடமும் உதவி கேட்க முடியாது. தோட்ட தொழில் ஊடாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும், மூத்த மகனை நம்பியே உள்ளேனென மனத் தைரியத்துடன் தனது வாழ்க்கைச் சுமையை விபரிக்கிறார் 31 வயதுடைய தேயிலைத் தோட்டத் தொழிலாளியான சரஸ்வதி.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்குநாள் உயர்வடைந்து செல்கின்றன. ஒரு கிலோ கோதுமை மாவின் விலையோ 410 ரூபாவை தண்டியுள்ளது. சரஸ்வதி போன்ற தோட்டத்தொழிலாளர் குடும்பங்களின் பிரதான உணவாக கோதுமை மாவால் செய்யப்படும் ரொட்டியே காணப்படுகின்றது. ஆனால் இவர்களின் நாட்சம்பளமோ 1000 ரூபாவிலும் குறைவாகவே காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்தின் பண்டாரவளையிலுள்ள பொருந்தோட்டப் பகுதிகளில் வாழ்க்கைக்காக போராடும் பல குடும்பங்கள் உள்ளன. அதில் ஊவா ஹைலன்ட்ஸ் தோட்டம் உல்பெத்த பகுதியில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தும் நோயின் கொடூரத்தால் குடும்பத் தலைவனை இழந்த ஒரு இளம் குடும்பமே சரஸ்வதியின் குடும்பம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அன்றாடம் கூலித்தொழில் செய்து தமது வாக்கையைக் கொண்டு நடத்தும் குடும்பங்களே பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளன. அதில் ஒன்று சரஸ்வதியின் குடும்பம்.

இவ்வாறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள குடும்பங்களில் உள்ள சிறுபிள்ளைகள் போஷாக்கு, மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

 

 

பெரும்பாலும் இலங்கையில் மக்களின் உணவாக கோதுமை மாவால் செய்யப்படும் ரொட்டி மற்றும் பேக்கரி உற்பத்திகளான பாண் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் காணப்படுகின்ற நிலையில் கடந்த 6 மாதங்களில் பாணின் விலை 150 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு இறாத்தல் பாணின் விலை 190 ரூபாவாக காணப்படுகின்றபோதும் பாணின் விலையை 300 ரூபாவாக விற்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

“ எனக்கு மாதம் 15 அல்லது 16 ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கப்பெறும் . பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். உணவிற்கான பிரச்சினை உள்ளது கடந்த மூன்று வருடகாலமாக சுகயீனமான கணவனை வைத்துக்கொண்டு எனது குடும்பத்தைக் கொண்டு நடத்தினேன். எமக்கு வீடில்லை… எமக்கென மலசலகூடம் கூட இல்லை. பிற தோட்டங்களில் வீடுகளை அமைத்துக் கொடுத்ததைப் போன்று இப்பகுதியில் ஏதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.சகலருக்கும் பிரச்சினை உள்ளது எவரிடமும் உதவி கேட்க முடியாது என்கிறார்” மிகவும் ஏக்கத்துடன் சரஸ்வதி

இலங்கையில் சுமார் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் இருப்பதாகவும் இதன் காரணமாக நகர்புற, கிராமபுற மக்களை காட்டிலும் பெருந்தோட்ட மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் கூறுகின்றது.

பல சிறுவர்கள் போஷாக்குக் குறைவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சிறுவர்களில் பலர் பெருந்தோட்டத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் வருமானமின்மையே பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.

“ பிள்ளைகளுக்கு உணவு பிரச்சினை உள்ளது. பிள்ளைகளுக்கு போசனை பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. போசாக்கின்மையால் பிள்ளைகளின் கல்வி அறிவும் பாதிக்கப்படுகிறது.அதேமட்டத்தில் சாதாரண போசனையில் உள்ள பிள்ளைகள் மந்தபோசன நிலையினை அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. பிள்ளைகளுக்கு நிறைவான உணவை வழங்குவது கூட பிரச்சினையாகவுள்ளது”. என்கிறார் ஊவா ஹைலன்ட்ஸ் தோட்டம் உல்பத்த- பழைய பிரிவு பண்டாரவெலயில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர் திருமதி காளிமுத்து பூங்கொடி.

இலங்கையில் 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் (6.26 மில்லியன் மக்கள்)  உணவுப் பாதுகாப்பற்றவர்கள் எனவும்,  அவர்களில் 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளதாகவும் தொடர்ந்தும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதால் போசணை குறைப்பாடுகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் கூறுகின்றது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜூனில் 75.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் அதே ஆண்டு ஜூலையில் 82.5 சதவீதமாக அதிகரித்தது இதனையடுத்து அதே ஆண்டு ஆகஸ்ட்  மாதத்தில் உணவுப் பணவீக்கம் 93.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சுமை வாட்டி வதைக்க ஒருவேளை உணவுக்கே அலைந்துதிரியும் நிலையில், எவ்வாறு சரஸ்வதி போன்ற பெண்களால் வீட்டை நிர்மாணித்து பிள்ளைக்கு 3 வேளையும் போசாக்குள்ள உணவுகளையும் கல்விக்கான செலவுகளையும் முகாமைத்துவம் செய்ய முடியும் என்பது இயலுமான காரியமா ?

“ தற்போதைய வாழ்க்கை செலவு மிகவும் சிரமமானது.1000 ரூபா என்பது சிரமமானது.தோட்ட தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல. வீடு பிரச்சினைதான் பிரதானமாகவுள்ளது. பொருளாதார பிரச்சினையினை சமாளித்துக்கொள்ள முடியும். தோட்ட தொழில் ஊடாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும், மூத்த மகனை நம்பியே உள்ளேன்” என்கிறார் சரஸ்வதி.

‘“அத்தியாவசிய தேவைகள் கூட அவர்களுக்கில்லை.மலசலகூட வசதிகள் கூட அவர்களுக்கில்லை.அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கவலைக்குரியது. எம்மால் முடிந்த உதவிகளை அந்த குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளோம்.இப்பகுதியில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவத்திலான குடும்பங்கள் உள்ளன.

1000 ரூபா சம்பளத்தை எடுத்துக்கொண்டால் தற்போதைய காலக்கட்டத்தில் போதாத நிலையில் உள்ளது.தோட்ட தொழிலாளர்கள் வறுமை நிலையில் வாழ்கிறார்கள்.” என்கிறார் ஊவா ஐலன்ட்ஸ் தோட்டம் உல்பத்த- பழைய பிரிவு பண்டாரவெலயில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர் திருமதி காளிமுத்து பூங்கொடி.

நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் அதாவது 61 சதவீதமானோர் குறைந்த விருப்பமான மற்றும் குறைவான சத்துள்ள உணவை உண்பது மற்றும் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது போன்ற உத்திகளை பயன்படுத்துகின்றன.மேலும் ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான உணவுகளை உட்கொள்வதில்லை. பெருந்தோட்டத் துறையில் வாழும் மக்களிடையே உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அவர்களில் 50 சதவீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளன. உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சமாளிக்கும் உத்திகளின் அனைத்து நடவடிக்கைகளிலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை விட, பெருந்தோட்ட குடும்பங்கள் தொடர்ந்து மோசமான விளைவுகளைக் எதிர்கொண்டுள்ளனர். உலக உணவுத் திட்டம் கூறுகின்றது.

 

தமது நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு சரஸ்வதி போன்ற தொழிலாளர்கள் கடந்த பல வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் அது இதுவரை எட்டாக்கனியாக காணப்படுகின்றது. அவ்வாறு 1000 ரூபா கிடைக்கப்பெற்றாலும் அவர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை இயக்குவதென்பது கடினமே.

பெருந்தோட்ட துறையில் காணப்படும் குறைந்த சம்பளம் ( 1000 ரூபாய்) சிறுவர்கள் வேலைக்கு செல்லும் வீதத்தை அதிகரிக்கின்றது. குடும்பங்களிற்கு மேலதிக வருமானம் தேவைப்படுவதே இதற்கு காரணம். குறிப்பாக மாணவிகள் தங்கள் குடும்பத்தை பராமரிப்பதற்காக பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுகின்றனர் என ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் டொமயா ஒபகட்டா தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது.  அதைத் தொடர்ந்து சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளன. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டினா, சூரினாம், எத்தியோப்பியா மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் உள்ளன

“ இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தோட்ட தொழிலே நிரந்தரம். தோட்ட தொழிலுக்கு செல்பவர்களுக்கு 1000 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறுகிறது. இந்த 1000 ரூபா தற்போதை நிலைமையில் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது.” என்கிறார் ஊவா ஐலன்ட்ஸ் தோட்டம் உல்பத்த- பழைய பிரிவு பண்டாரவெலயில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர் திருமதி காளிமுத்து பூங்கொடி.

இலங்கையில் வாழும் சிறுவர்களின் தேவைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இருப்பினும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போசணை மற்றும் வளர்ச்சி என்பவற்றுக்கு அவசியமான வளங்களைப் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலையிலுள்ளதாக யுனிசெப் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மக்கள் உணவு மற்றும் பிற தேவைகளுக்காக கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்றாடப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள்  செய்வதறியாது திண்டாடுகின்றனர். அரசாங்கம் நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து நிவாரணங்களை வழங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.