மக்களுக்காக
எரிதனலேந்தி
மண்ணிலே சாய்ந்த
மைந்தனே முருகா
துன்பமே சூழ்ந்த
தமிழ் மக்களின்
வாழ்வினை மாற்ற
தீயினைச் சூடிப்
போரினைத் தொடுத்து
பொன்னெழுத்துகள் சூடி
மண்ணிலே சாய்ந்தாய்!
தாய் மண்ணிலே இன்றும்
துன்பங்கள் சூழத்
துயரங்கள் ஆளத்
துடிக்கிறார் மக்கள்
வடிக்கிறார் உதிரம்
உதிரத்தால் உறைந்த
உயிரெனும் தாய்நிலம்
அடிமையாய் இன்னும்
அழிகின்ற நிலையாய்
தொடர்வதும் ஏனோ!
ஈகங்களாலே
ஈன்ற எம் தேசம்
வேடங்களாலே வேற்றவராள
மாற்றான் போன்று
மகுடிக்கு ஆடும்
பாம்புகளான தலைமைகளாலே
விடையென்று வருமென்று
வானகம் இருந்தே
முருகதாசனோ தவிக்கின்றான்!
ஈகத்தின் சுடரே
தலைகுனிகிறோம் தம்பி
அங்கிங்கொன்றாய்
எழுகின்ற தமிழனம்
அலைஅலையாக
எழுகின்ற பொழுதிலே
அகதியாய்த் தமிழனெனும்
அடைமொழி துறந்து
உன் ஈகத்தைப் போற்றி
நடுகல் பதிப்போம்
நம் தமிழீழ மண்ணிலே!
மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி