6 மாத காலத்திற்கு மாத்திரமே ரணில் அரசாங்கம் பதவியில் இருக்கும்

123 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இன்னும் ஆறு மாத காலத்திற்கு மாத்திரமே பதவியில் இருக்கும்.ஆளும் தரப்பின் ஒருசிலர் தமது குறுகிய தேவைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சி தலைவர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கான கொள்கை திட்டத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இதுவரை முன்வைக்கவில்லை.சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை அடிப்படையில் 2.9 பில்லியன் நிதியை வழங்க சர்வதேச நிதியம் இணக்கம் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தும் போது நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமையவே மின்சாரம் மற்றும் நீர் விநியோக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் நாட்களில் மேலும் சில சேவைகளின் கட்டணம் அதிகரிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இன்னும் 06 மாத காலத்திற்கு மாத்திரம் பதவியில் இருக்கும்.

மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக்கொள்ள நாட்டு மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆளும் தரப்பின் ஒருசிலர் தமத குறுகிய தேவைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும்  அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.தவறான ஆலோசனைகளே அவரது நிர்வாகத்தை முழுமையாக பலவீனப்படுத்தியது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மக்களாணை உண்டு என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.மக்களாணை உள்ளதாக குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினர் உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போட அழுத்தம் பிரயோகிக்கிறார்கள் என்றார்.