ஜெனிவாவில் அரசுக்கு பெரும் நெருக்கடி- தயான் ஜயத்திலக

147 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படுவதற்கே அதிகமான சாத்தியங்கள் உள்ளதாக இராஜதந்திரி கலாநிதி. தயான் ஜயத்திலக எதிர்வுகூறியுள்ளார்.

2015இல் இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களைச் செய்வதாக வாக்குறுதி அளித்து ஐ.நா.வின் 30.1பிரேரணைக்கு இணை அணுசரணை வழங்குவதற்கு காரணமான ரணில் விக்கிரமசிங்கவே இம்முறை பிரேரணை எதிர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு எதிர்வரும் 12ஆம்திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே தயான் ஜயத்திலக மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பின்விளைவு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவானது விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் உள்ளிட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தபோது, அதனை அப்போதைய அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை. தற்போது அதன் பலனை உணரப்போகின்றது.

2015ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கியது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆணைப்படி மறைந்த மங்கள சமரவீர அதற்கான கையொப்பத்தினை இட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அதே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் ஐ.நாவின் பிரேரணை, ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை உள்ளிட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு இயலாத நிலைமையில் உள்ளார். இதனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இம்முறை நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு பலத்த நெருக்கடிகள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. இந்த நெருக்கடிகள் உருவாகுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவே பிரதானமாக காரணமாகவும் உள்ளார்.

தற்போதைய நிலைமைகள் முதலாவதாக, மக்களின் ஆணையைப் பெற்றுக்கொள்ள முடியாத ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களால் தான் ஜனாதிபதி பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவர் ராஜபக்ஷக்களின் பதிலியாகவே செயற்பட முடியுமே தவிரவும், அவரால் சுயாதீனமாக தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன்காரணமாக, தற்போது ஜனாதிபதி பதவியை வகித்தாலும், ஐ.நா. தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அவர் எதிர்க்க வேண்டிய நிலைமையில் உள்ளார்.

இரண்டாவதாக, ரணில் விக்கிரமசிங்க தற்போது குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான படைகளுக்கு விசுவாசமானவராக மாறியுள்ளார். விசேடமாக கூறுவதானால், மிருசுவிலில் குழந்தைகள் உள்ளிட்டவர்களை படுகொலை செய்த சாஜன்ட் சுனில் ரத்தநாயக்கவுக்கு கோட்டாபய பொதுமன்னிப்பளித்தபோது, அவரை நேரில் சென்று அழைத்துவந்த ஜெனரல் கமல் குணரத்னவையே ரணில் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமித்துள்ளார். இதன்மூலம், ரணில் தனது அதிகார மையம் படைகளின் மத்தியில் தான் உள்ளது என்ற விடயத்தில் உறுதியாக உள்ளார். அதனாலேயே அவர் இராணுவத்தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து படைகளை சந்தித்து நன்றி கூறியுள்ளார்.

மூன்றாவதாக, மக்கள் எழுச்சியின் ஊடாக பதவி கவிழ்க்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபயவை மீண்டும் நாட்டுக்குள் அழைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்குவதோடு, ஏனைய ராஜபக்ஷக்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் எவ்விதமான விசாரணைகளும் முன்னெக்கப்படவில்லை. நான்காவதாக, ரணில் விக்கிரமசிங்க பதவியைப் பெற்றுக்கொண்டதும், ஆயுதங்கள் இல்லாது ஜனநாயக வழியில் போராடிய காலிமுகத்திடல் போராட்டக்கரர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால தடைச்சட்டம் ஆகியவற்றை கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்தியதோடு, போராட்டக்காரர்களை அடக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். கைகொடுக்காத மேற்குலக முகம் இதேநேரம், ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்திற்கு நெருக்கமானவராக கருதப்படுகின்றார். ஆனால் இந்த நெருக்கமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அவருக்கு கைகொடுக்காது. தற்போது சர்வதேச நாணயநிதியத்துன் முதற்கட்ட ஒப்பந்தத்தினை மேற்கொண்டு வெற்றி கண்டுவிட்டதாக தர்க்க ரீதியாக குறிப்பிட முடியும்.

ஆனால், சர்வதேச நாடுகளான அமெரிக்கா, பிரித்தனியா போன்ற நாடுகள் தமது மக்களின் ஆணையைக் கொண்டிருப்பதால் அம்மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் சென்று தீhமானம் எடுக்கும் என்று கூறுவதற்கு இல்லை. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ரி.பப்ளிக் தரப்பினர் மற்றும், பிரித்தானியாவின் கன்சர்வேட்டித் தரப்பினர் ஆகியோருடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார். ஆனால், அந்த உறவுகள் தனிப்பட்டவையாக இருக்குமே தவிரவும் ஐ.நா.வின் தீர்மானங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தாது.

நீட்டிசியாகும் ஏற்கனவே போரின் இறுதியில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விடயங்கள் சர்வதேசத்திடத்தில் காணப்படுகையில், தற்போது காலிமுகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல்களுக்கான சாட்சியங்களும் சர்வதேசத்திடம் சென்றுவிட்டன. இதனைவிடவும், மக்களால் தெரிவுசெய்யப்படாத ஒருவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயக மறுப்புச்செயல்களை முன்னெடுக்கின்றமையும் வெளிப்படையாக உணரக்கூடியதாக உள்ளது.

ஆகவே, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையிலும், அதன் நீட்டிசியாக அண்மைக்கால சம்பவங்களையும் உள்ளீர்த்த நீடிக்கப்பட் பிரேரணையாகவே இம்முறை இலங்கைக்கு எதிரான பிரேரணை அமையும். அது இலங்கைக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.