எதிர்ப்புகளுக்குப் பின்னால்

288 0

“மன்னார் காற்றாலைத் திட்டத்துக்காக அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மீள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது தற்காலிக அனுமதி தான் என்றும் அமைச்சர் காஞ்சன கூறியிருப்பது  ஆச்சரியமானது” 

மன்னாரில் இரண்டு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கனிய மணல் அகழ்வு, முதல் விடயம். காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது இரண்டாவது விடயம்.

கனிய மணல் அகழ்வினால் மன்னார் தீவு எதிர்கொள்ளும் ஆபத்து குறித்து முன்னரே எச்சரிக்கப்பட்ட போதும், இதுவரை அதுபற்றி அதிகம் அக்கறை கொள்ளாமல் இருந்த தரப்புகள் இப்போது விழித்துக் கொண்டிருக்கின்றன.

காற்றாலை மின்கோபுரங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகியிருந்த நிலையிலும், இப்போது அதற்கெதிராக போர்க்கொடி உயர்த்தப்படுகிறது.

இந்த இரண்டு திட்டங்களுக்கு எதிராகவும், ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டங்கள் இன்னமும் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை.

ஆனால் இந்தப் போராட்டங்களில் நியாயப்பாடுகள் இல்லை எனக் கூறமுடியாவிட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட நோக்கங்கள் இருக்காதென உறுதியாக கூறமுடியாது.

குறிப்பாக காற்றாலை மின் திட்டங்களை அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அதற்கெதிரான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

மன்னாரிலும், பூநகரியிலும், பளையிலும் ஏற்கனவே காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்சார உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

காற்றாலை மின் உற்பத்தி என்பது, அதிக செலவில்லாமல், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு எளிய வழியாகும்.

இயற்கைச் சூழலுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்தியாவில் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு தமிழகத்தில் தான் இடம்பெறுகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தனியார் நிறுவனங்கள் காற்றாலைப் பண்ணைகளை அமைத்து, அரசாங்கத்துக்கு மின்சாரத்தை விற்கின்றன.

காற்றாலைகள் அதியுச்ச மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது, தமிழகத்தின் மின் நுகர்வில், 35 சதவீதத்தை காற்றாலைகளை ஈடுசெய்கின்றன.

ஏற்கனவே பளை, பூநகரி, மன்னார் ஆகிய இடங்களில் காற்றாலை மின்உற்பத்தி கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கெதிராக பெரியளவில் எதிர்ப்புகள் தோன்றவில்லை.

பூநகரியில் சில இடங்களில் காற்றாலைகளால் தொலைதூரத்துக்கு புழுதி மணல் வீசுவதாக குற்றச்சாட்டுகள் காணப்பட்டன.

சோள காற்று வீசும் போது பல இடங்களில் இயல்பாகவே இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும். காற்றாலைகளால் அது ஏற்படுகின்றதாயின் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதொன்று.

அண்மைய பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிகள், உடனடியாக புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.

ஏனென்றால், எரிபொருளைக் கொண்டு உற்பத்தி செய்யும் மின்சாரம், கிட்டத்தட்ட தடைப்படும் நிலையே அண்மையில் உருவானது.

கடைசி நேரத்தில் இயற்கை கைகொடுத்து, மழை பெய்து நீர் மின் உற்பத்தி அதிகளவில் இடம்பெற்றதால், தான் பாரிய மின்தடையில் இருந்து நாடு காப்பாற்றப்பட்டது.

இல்லாவிட்டால், எரிபொருள் இறக்குமதிக்கு டொலர் இல்லாமல் திணறிய அரசாங்கத்தினால் நிச்சயமாக, மின்சாரத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

14 மணிநேர மின்வெட்டு வந்திருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க முடியாது. இலங்கை பாரிய மின்சார நெருக்கடியைச் சந்திக்கும் என்பது, கடந்த தசாப்தத்திலேயே எதிர்வு கூறப்பட்ட ஒரு விடயம்.

ஏனென்றால் இலங்கையின் எதிர்கால மின் தேவையின் அடிப்படையில் தான், சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க 15 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது.

அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அதனை  சூரிய மின்சக்தி திட்டமாக மாற்றுவதற்கு இந்தியப் பிரதமர் மோடி கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கொள்வனவு பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்படாது போனதால், அந்த திட்டம் இன்னமும் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

அந்த திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால் இலங்கைக்கு அதிகளவில் நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

இவ்வாறான நிலையில் மன்னார், பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களை அமைக்க அரசாங்கத்தினால் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தியாவுக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம் அதனிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலையில், மேற்கு கொள்கலன் முனைய திட்டத்தையும், காற்றாலை மின் திட்டத்தையும் அதானி குழுமத்துக்கு வழங்கி, நிலைமையைச் சமாளிக்க முயன்றது கோட்டா அரசாங்கம்.

இந்த காற்றாலை மின் திட்டம் 500 மில்லியன் டொலருக்கும் அதிக முதலீட்டைக் கொண்டது. இந்த திட்டம் செயற்படுத்தப்படுவது மின்சார விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கு உதவுவதுடன், டொலர் நெருக்கடிக்கும் தீர்வாக அமையும்.

பெரியளவிலான முதலீடும் இலங்கைக்குள் கொண்டு வரப்படும். ஆனால் அதற்கு சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. மன்னாரில் உள்ள மக்களும் இப்போது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட்டால் அது, நிச்சயமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று.

ஆனால், எதிர்க்கும் சக்திகள் அவ்வாறான நியாயமான காரணங்களை முன்வைக்கவில்லை என்று கூறியிருக்கிறார் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

இந்த திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நியாயமான காரணத்தை முன்வைத்தால், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மீள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது தற்காலிக அனுமதி தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமைச்சரின் இந்தக் கருத்து ஆச்சரியமானது.  ஏனென்றால், மன்னார், பூநகரி காற்றாலைத் திட்டங்கள் ஒன்றும் சிறியவை அல்ல. கிட்டத்தட்ட 500 மில்லியன் டொலர் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்.

இந்த திட்டத்துக்கு தற்காலிக அனுமதியே வழங்கப்பட்டது, அதனை மீளப்பெற முடியும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருப்பது சர்ச்சைக்குரியதும் கூட.

மிகப்பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்குவதும்- மீளப் பெறுவதும் சாத்தியமா?

இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பாரிய திட்டம் ஒன்று இடைநிறுத்தப்படும் போது அல்லது அனுமதி இரத்துச் செய்யப்படும் போன்று பெரியளவில் இராஜதந்திர நெருக்கடிகளையும் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.

2015இல், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்திய மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம், சீனாவிடம் இருந்து எதிர்கொண்ட நெருக்கடி அனைவரும் அறிந்த ஒன்று.

இவ்வாறான நிலையில், இந்தியாவிடமும் அவ்வாறு குட்டுப் பட்டுக் கொள்ளப் போகிறதா? இலங்கையின் தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் இருப்பது இரகசியமான விடயம் அல்ல.

ஒவ்வொரு சர்வதேச சக்தியும் தங்களுக்கென ஆட்களையும் அமைப்புகளையும் வைத்திருக்கின்றன. வர்த்தகம் தொடக்கம் அரசியல் வரை அந்த சக்திகளின் தாளத்துக்கே அவை ஆடுவது வழக்கம்.

அதுபோலத் தான், பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது அதற்கு தடை கோருவது நீதிமன்றம் செல்வது ஒருவழக்கமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

நன்மை, தீமைகளை ஆராயாமல், எது கூடுதல் பலன் தருகிறது என்று கவனத்தில் கொள்ளாமல், எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுப்பது அடிக்கடி நடக்கிறது. காற்றாலை விவகாரத்தின் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது.

கபில்