“ஐரோப்பாவுக்கான எரிபொருள், எரிவாயு விநியோகத்தை முன்வைத்து ரஷ்யா இப்போது பேரம் பேசுகிறது. அதுபோல எதிர்காலத்தில் இலங்கையுடன் பல நாடுகள், பேரம் பேச முனையலாம். அதனைத் தவிர்க்கவே போட்டிச் சந்தையை உருவாக்க முனைகிறது அரசாங்கம்”
சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த போது, 1961ஆம் ஆண்டு எண்ணெய் நிறுவனங்களை தேசிய மயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தார்.
அப்போது ஷெல் மற்றும் பிபி எனப்படும், பிரிட்டிஷ் பெற்றோலியம் ஆகிய நிறுவனங்கள் தான் இலங்கையில் பெற்றோலிய இறக்குமதி, மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தன.
இந்த நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது.
இப்போதைய பொருளாதார நெருக்கடிகள், மீண்டும் சிறிமாவோ அம்மையாரின் காலத்துக்கு, முந்திய நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கியுள்ளது.
இலங்கையின் எரிபொருள் விநியோகம் தனியாரின் கையில் – குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்த காலகட்டத்தில், திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு 35 ஆண்டு குத்தகைக்கு வழங்கிய இலங்கை அரசாங்கம், 85 நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்திருந்தது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கிட்டத்தட்ட 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருக்கும் நிலையில், 10 சதவீதத்துக்கும் குறைவான சில்லறை விற்பனை நிலையங்களை மாத்திரமே, லங்கா ஐ.ஓ.சியிடம் வழங்கியிருந்தது.
இதற்கு தென்னிலங்கையில் உள்ள கடும் போக்குவாதிகளும், சிங்கள பௌத்த தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் இருந்து மீளப்பெற வேண்டும் என்றும், அதனை இந்தியாவிடம் விட்டு வைப்பது, நாட்டின் இறைமையாண்மைக்கு ஆபத்து என்றும் அவர்கள் கூறினார்கள்.
இந்தநிலையில் தான், உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சராக இருந்த காலகட்டத்தில், திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒரு புதிய உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
அந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னர், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், பெரும் சவாலாக அமைந்து விட்டது.
குறிப்பாக எரிபொருள் நெருக்கடியினால், கிட்டத்தட்ட முழு நாடுமே ஸ்தம்பித்துப் போகின்ற நிலை ஏற்பட்டது.
இதற்குப் பின்னர் தான், எரிபொருள் இறக்குமதி, விநியோகம் போன்றவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னிலைப்படுத்த ஆரம்பித்தது.
இலங்கையின் எரிபொருள் விநியோக சங்கிலியை இந்தியா கைப்பற்றப் போகிறது. அதனை வைத்து நாட்டை ஆளப் போகிறது என்ற விமர்சனங்கள் கூறப்பட்ட போதும், லங்கா ஐ.ஓ.சியும், இந்தியாவும் தான், கடும் நெருக்கடியில் இருந்து, இலங்கை தப்பிப்பதற்கு ஓரளவுக்கு காரணமாகின.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு லங்கா ஐ.ஓ.சிக்கு டொலர் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அது ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்தது.
எண்ணெய் கொள்வனவுக்காக டொலரைத் திரட்டிக் கொள்வது முடியாத காரியமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் எரிபொருள் இறக்குமதியும், விநியோகமும் முற்றாகவே முடங்கிப் போயின.
அப்போது, கொஞ்சமேனும், நாட்டின் இதயத் துடிப்பை இயங்க வைத்துக் கொண்டிருந்தது லங்கா ஐ.ஓ.சி. தான்.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் எரிபொருள் நெருக்கடி படிப்படியாக தீரத் தொடங்கிய நிலையில், அரசாங்கம் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தில், வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தும், திட்டத்தை முன்வைத்தது.
அந்த திட்டம் செயற்படுத்தப்பட்டால், எரிபொருள் இறக்குமதிக்காக டொலரைத் திரட்டும் அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்படாது.
எண்ணெய் வள நாடுகளின் நிறுவனங்கள் அதனைப் பார்த்துக் கொள்ளும், நெருக்கடி வரும் போது சமாளித்துக் கொள்ளவும், நெருக்கடி வராமல் தேவையான எரிபொருளை கையிருப்பில் வைத்துக் கொள்ளவும், அந்த நிறுவனங்களால் இயலும்.
இதற்கமைய இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செய்தி விநியோகிக்க விரும்பும் நிறுவனங்களை பதிவு செய்ய அரசாங்கம் அழைப்பு விடுத்த போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருக்கிறார்.
இவற்றை ஆராய்ந்து, இறக்குமதி மற்றும், விநியோகத்தில் ஈடுபடக் கூடிய 4 நிறுவனங்களை அரசாங்கம் தெரிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் சினோபெக், பிரித்தானியாவின் ஷெல் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியில் இருக்கின்ற நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள 1200 விற்பனை நிலையங்களில், 700 வரையான விற்பனை நிலையங்களை இந்த நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை விநியோகிக்கும் பணியை மட்டும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டால், இலங்கையின் எரிபொருள் சந்தையில் கடும் போட்டி உருவாகும்.
தற்போது இந்தியாவின் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், போட்டி நிறுவனங்களாகச் செயற்படவில்லை. இரண்டும் ஒரே விலையிலேயே எரிபொருளை விற்கின்றன.
இந்த நிலையினால், சர்வதேச சந்தை எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன்களை இலங்கை மக்களால் அனுபவிக்க முடியாமல் உள்ளது.
பல நாடுகளின் நிறுவனங்கள், போட்டியில் குதிக்கும் போது, சந்தையில் விலை ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். இது நுகர்வோருக்கு சாதகமாக அமையலாம்.
ஆனால், இந்த திட்டம் எந்தளவுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால், இலங்கையில் வலுவாக உள்ள தொழிற்சங்கங்களில் ஒன்று பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர் சங்கம் ஆகும். தொழிற்சங்கங்கள், உள்ளூர் சந்தையில், சர்வதேச நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை விரும்பாது.
அவை நாட்டின் மீதான இறைமையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டை தொழிற்சங்கங்கள் முன்வைக்கும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நிலை காணப்படுவது, இறைமை, சுயாதீனம் என்பனவற்றை, பாதிக்கும் என்பது உண்மையே.
எரிபொருள் விநியோகத்தை முன்வைத்து பல நாடுகள் பேரம் பேச முனையும், தங்களின் நலன்களை அடைய முயற்சிக்கும்.
ஐரோப்பாவுக்கான எரிபொருள், எரிவாயு விநியோகத்தை முன்வைத்து ரஷ்யா இப்போது பேரம் பேசுகிறது. அதுபோல எதிர்காலத்தில் இலங்கையுடன் பல நாடுகள், பேரம் பேச முனையலாம்.
அதனைத் தவிர்க்கவே போட்டிச் சந்தையை உருவாக்க முனைகிறது அரசாங்கம். தனியொரு நாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்காமல், எரிபொருள் விநியோகம் பல நாடுகளிடம் வழங்கப்படும் போது, இந்த நிலை ஏற்படாது.
குறிப்பாக இலங்கையின் எரிபொருள் சந்தையை இந்தியா கட்டுப்படுத்துவதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை.
இதனால், வேறு நாடுகளையும் களத்தில் இறக்கி விடவுள்ளது. இதற்கு இந்தியா எத்தகைய பிரதிபலிப்பை காண்பிக்கும் என்று தெரியவில்லை.
இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் ஆட்குறைப்பு உள்ளிட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
அதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தும் நிலை உருவாக்கலாம். டொலர் நெருக்கடியை காரணம் காட்டி அரசாங்கம் இந்த எதிர்ப்புகளை சமாளித்தாலும், போட்டிச் சந்தையை உருவாக்குவது இலகுவானதாக இருக்காது.
கார்வண்ணன்