யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு எழுக தமிழ் பெண்களைப் பிரதிபலிக்கத் தவறிவிட்டது என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக நிகழ்வுகளில் கூட தீர்வுத் திட்டம் குறித்துப் முன்மொழியும்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் பெறப்படவில்லை.
அனைவரும் மேல்வர்க்க சிந்தனையின் குரலாகவே தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
எனவே, மாற்றுக் கருத்துக் கொண்ட மக்கள் பேரியக்கம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ் மக்கள் பேரவையும் எழுக தமிழும் தன்னுடைய பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.