தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.
சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவுச் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டது.
பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அப்பதிவில், ”அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. எங்கள் ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தொடர்ச்சியாக கிரிப்டோ கரன்சி குறித்து பதிவுகள் வந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜியை பின் தொடர்பவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.