அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல்போனமை – கோட்டாபய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றார்

118 0

பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஏழுவாரங்கள் நாடு கடந்த நிலையில் வசித்த பின்னர் இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச  செயற்பாட்டாளர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதிக்கு இலங்கையின் அரசமைப்பு வழங்கியுள்ள விடுபாட்டுரிமை தற்போது அவருக்கு இல்லாததன் காரணமாக அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.

தாய்லாந்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு திரும்பிய கோட்டாபய ராஜபக்ச கடும் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசமைப்பு வழங்கிய சிறப்புரிமை காரணமாக கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் எதுவும் இல்லை.பாதுகாப்பு செயலாளராக அவர் பணியாற்றியவேளை இடம்பெற்ற ஊழல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் அவர் ஜனாதிபதியான பின்னர்  விலக்கிக்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும் இரண்டு இளம் அரசியல் ஆர்வலர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிப்பதிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட விடுபாட்டுரிமையை சவாலிற்கு உட்படுத்தி  அவரை உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்படும் என  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நுவான்போபகே தெரிவித்துள்ளார்.

ஜூலையில் அழைப்பாணை அனுப்பப்படவிருந்த வேளை கோட்டாபய நாட்டிலிருந்து தப்பியோடினார் என நுவான்போபகே தெரிவித்துள்ளார்.

இந்த காணாமல்போதல் சம்பவங்கள் 12 வருடத்திற்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர்   கோட்டாபய ராஜபக்ச நாட்டின் வலுவான பாதுகாப்பு அதிகாரியாக சகோதாரர் மகிந்த ராஜபக்ச( அவ்வேளை ஜனாதிபதி)

அரசாங்கத்தின் கீழ் காணப்பட்டவேளை இடம்பெற்றன.

அவ்வேளை கிளர்ச்சிக்காரர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கடத்தி சென்ற கடத்தல் குழுவினை வழிநடத்தினார் என கோட்டாபய ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட பலர் மீண்டும் திரும்பிவரவில்லை,கோட்டாபய தான் தவறிழைத்தார் என்பதை மறுத்துள்ளார்.

நாடு பொருளாதாரவங்குரோத்து நிலைக்குள் தள்ளப்பட்டு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் அத்தியாவசியப்பொருட்களிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொண்டதால் சீற்றமடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜூலை9 ம் திகதி கட்டிடங்களிற்குள் நுழைந்ததை தொடர்ந்து ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பிவெளியேறினார்.

சில நாட்களிற்கு பின்னர் அவரும் அவரது மனைவியும் மெய்பாதுகாவலரும் இராணுவ விமானத்தில்  மாலைதீவிற்கு தப்பிச்சென்றனர் அதன் பின்னர் சிங்கப்பூரிற்கும் பின்னர் தாய்லாந்திற்கும் சென்றனர்.