மாற்றம் என்பது எங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். மற்றவர்கள் செய்வார்கள் என்று இருக்காமல், நாங்களாகவே முயற்சிகளை மேற்கொள்கின்றபோது தான் மாற்றங்கள் உருவாகும் என்பதை நடைமுறையில் செய்து காட்டியுள்ளார், நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி. கௌசலா சிவா. உள்ளுராட்சி மன்றங்கள் எத்தகைய தொழில் மற்றும் பொருளாதார முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடியபோதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
“உள்ளூராட்சி மன்றங்கள் தத்தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்கள், கிராமங்களை அடையாளம் கண்டு, சிறு சிறு தொழில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், தவிசாளர்கள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி புது சட்டவாக்கங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது கடமைகள் என்ன என்பதை உணர்ந்தவர்களாக தமது எல்லைக்குட்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, மக்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றம் என்பது அரசியல் கதைப்பதற்கான இடம் இல்லை. அதற்குரிய காலம் வரும்போது அந்த அரசியலை கதைக்க முடியும்.
இன்றைய பொருளாதார நிலையை பார்க்கும் போது இந்த நாட்டில் தற்போது வறுமை நிலையே தோன்றியுள்ளது. நாங்கள் அடுத்தவர்களிடம் உதவிகளை எதிர்பார்ப்பதை விட நாங்களாகவே எமக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
நாங்கள் எமது விடுதலைக்காக கடந்த 30 வருட காலமாக போராட்டத்தை சந்தித்தவர்களாக இருந்தோம். இதனால் பல்வேறு இழப்புக்களையும் சகிப்புத் தன்மைகளையும் கடந்து வந்துள்ளோம். மீளவும் எமக்கான முன்னேற்றத்தை அடையும் வேளையில் கடந்த இரு வருடங்களாக கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு, வெளியிலே நடமாட முடியாதவர்களாக, சமூகத்தினருடன் உறவாட முடியாதவர்களாக பல்வேறு நெருக்கடிகளை நாம் சந்தித்தோம். இருந்தும் நாங்கள் எங்களுக்குரிய விடயங்களை செய்ய முடியாதவர்களாகவே இருந்துள்ளோம்.
நாங்கள் கடந்த கால அனுபவங்களை சிறந்த பாடங்களாக கற்றிருந்தால், இன்றைய சூழலையும் வெற்றிகரமாக நகர்த்தியிருக்க முடியும்.
எனினும், நாங்கள் அதனை எதிர்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோம். இந்நிலையில் நாங்கள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு, வீட்டுத்தோட்டங்கள், எமக்கே உரிய உணவுத் தயாரிப்புக்கள் போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
வீட்டுத்தோட்டங்களை ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் செய்வார்களாயின், தமக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுகளை தாங்களே பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு தமக்கு தேவையான உணவுகளை பெற்றுக்கொண்டு, அதிகமாக உள்ளதை ஏனையவர்களுக்கோ அயலில் உள்ளவர்களுக்கோ அல்லது அப்பகுதியில் உள்ள சிறிய வியாபார நிலையத்துக்கோ வழங்குவதன் மூலம் சிறுதொகை வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
நல்லூர் பிரதேச சபையில், எமது எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்தகைய முயற்சிகளை கைக்கொண்டு வருகிறேன்.
இதற்காக சபையின் செயலாளருடன் கலந்துரையாடி, பிரதேச சபையில் உயரிய அனுமதியினை பெற்று, நாட்டில் தற்போதைய பொருளாதார இடர்களை கருத்தில் கொண்டு நஞ்சற்ற காய்கறி உற்பத்தியை பெருக்கி, அதனூடாக சுய பொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.
ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குதல் எனும் நோக்கில், எனது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு தானிய விதைகள், நாற்றுகள் அதனோடு இணைந்த பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் பசளையையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி, அதனை செயற்படுத்தி வருகின்றோம்.
நான் உள்ளூராட்சி சபைக்கு வரும் முன்பே இயற்கையில் ஆர்வமுடையவராக மர நடுகை, வீட்டுத்தோட்டம் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அத்தோடு என்னை சார்ந்தவர்களிடமும் இவற்றை மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்தியுள்ளேன்.
எனது அடுத்த கட்ட முயற்சி, யாழ்ப்பாணத்துக்குரிய பாரம்பரிய உணவுகளை உற்பத்தி செய்வதாகும்.
சில தயார்ப்படுத்தல்களோடு பாரம்பரிய உற்பத்திகளை மேற்கொள்கின்றபோது அடுத்த தலைமுறைக்கும் விவசாயம் மற்றும் தோட்டக்கலையினை கடத்த முடிகிறது.
அத்துடன் இந்த இடத்துக்குச் சென்றால், யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவுகள் கிடைக்கும் என்கிற அடையாளத்தை ஏற்படுத்த முடியும். இதற்கு உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு தேவை.
ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தங்களது எல்லைக்குட்பட்ட வளங்களை அடையாளம் கண்டு, அதனூடாக கைத்தொழில் பேட்டைகளை அமைத்து, இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்.
எமது பிரதேசத்தின் எல்லையில் உப்பளம் அமைப்பதற்கு ஏற்ற வசதி வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இதனை சரியான முறையில் திட்டமிடுகின்றபோது முறையான கைத்தொழில் பேட்டையை உருவாக்க முடியும். இதற்காக எனது முயற்சிகள் தொடரும்…” என கூறுகிறார்.
எம். நியூட்டன்