மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தரிசு நிலங்களாக உள்ள காணிகளை மலையக மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அரசாங்கம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வறிய குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய கொடுப்பனவுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். விவசாயத்துறையின் வீழ்ச்சி காரணமாகவே நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தரிசு நிலங்களாக உள்ள காணிகளை மலையக மக்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் அவ்வாறான காணிகளை அந்த மக்களுக்கு வழங்குவது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அரசாங்கம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்
மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக மலையக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். என்றாலும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.