நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தமானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பல்வேறு துன்பங்களை விட்டுச் சென்றிருக்கிறது அந்த வகையில் சில தரப்பினர் தங்களுடைய துன்பங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன் கொண்டு செல்கின்ற அதே வேளையிலே இன்னொரு பகுதியினர் தங்களுடைய வாழ்வை நாளும் பொழுதும் தொலைத்தவர்களாக நடைபிணங்களாகி வருகின்ற சோக கதை தொடர்ந்தே வருகின்றது.
முல்லை தீவு மாவட்டம் பன்னெடுங்கால யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்தது மாத்திரமன்றி ஆழிப்பேரலை அனர்த்தத்தினாலும் பல்வேறு வகைகளிலும் தொடர்ச்சியாக பேரழிவுகளை சந்தித்தது. அங்கு வாழ்கின்ற மக்கள் பல்வேறு சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற நிலையிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளும் பொழுதும் அவர்களுடைய வாழ்வை உருக்கி உருக்கி நடைபிணங்களாக வருகின்ற நிலைமை தொடர்ந்து வருகின்றது
அந்த வகையிலே நாட்டில் இடம் பெற்ற கொடூர யுத்த காலப்பகுதியிலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்ற போர்வைக்குள் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்திடம் கையளித்தவர்கள் யுத்த காலப்பகுதிக்குள் தங்களுடைய உறவுகளை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கடலிலே தொழிலுக்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இவ்வாறு பல்வேறு வகையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய பல்லாயிரக்கணக்கான உறவுகள் இன்றும் வடகிழக்கில் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே எப்போது வருவார்கள் அவர்களுக்கு என்ன நீதி என்று தெரியாமல் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை கோரி போராடி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியிலே வடக்கு கிழக்கு உட்பட்ட 8 மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களுடைய உறவுகளை தேடி தொடர்ச்சியாக 13 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை அவர்களுக்கு எந்த விதமான நீதிகளும் கிடைக்கப் பெறாது போராடி வருகின்றனர்.
இவர்களது போராட்டங்கள் எவையும் எந்தவிதமான தீர்வுகளையும் கொண்டு வராத நிலைமையிலே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த வடகிழக்கினுடைய 8 மாவட்டங்களிலும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாளை கடக்கிறது இவ்வாறான நிலையிலே இன்றைய நாள் சர்வதேச வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய தினமாக காணப்படுகின்ற நிலைமையிலே இந்த நாளிலே உறவுகள் புதுக்குடியிருப்பு நகரில் பாரிய ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான விசாரணை சர்வதேச விசாரணை ஊடாக இடம்பெற வேண்டும் என்றும் குற்றம் இழைத்தவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரி பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து தங்களுடைய பிள்ளைகளை தேடிய சுமார் 140 க்கு மேற்பட்ட தாய், தந்தையர்கள் இன்று வரை தங்களுடைய பிள்ளைகளுக்கான நீதி கிடைக்கப்பெறாமலே தங்களுடைய வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர் இன்று அவர்களுடைய அந்த பிள்ளைகளை தேடுவதற்கு வேறு யாரும் அற்ற நிலை கூட காணப்படுகின்றது இவ்வாறு தாங்கள் இறப்பதற்கு முன்னாவது தங்களுடைய பிள்ளைகளை காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு வாழ்பவர்கள் ஆயிரம் பேர்.
இவ்வாறானவர்களில் வாழ்கின்ற ஒருவரே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வள்ளிபுனம் என்னும் கிராமத்தில் வாசித்து வருகின்ற தங்கவேல் சத்தியதேவி ஆவார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்த மே மாதம் 18 ஆம் திகதி இலங்கை இராணுவத்திடம் தன்னுடைய மகள் சிவாயினி தன்னுடைய மருமகன் மகாலிங்கம் சின்னத்தம்பி தன்னுடைய மூன்று பேரப்பிள்ளைகளான மகிழினி, தமிழொளி, எழிலினி , என ஐவரையும் இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு வருகை தந்திருக்கின்றார்
இவ்வாறு இராணுவத்திடம் ஒப்படைத்த தன்னுடைய ஐந்து உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்டதை தொடர்ந்து தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல்வேறு ஆணைக் குழுக்கள், மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இன்னும் எங்கு எங்கு எல்லாம் அவர்களை தேட முடியுமோ அங்கு எல்லாம் தேடி இன்றுவரை தன்னுடைய ஐந்து உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் தன்னுடைய முதுமை காலத்திலே அவர்களைத் தேடிய அலைந்து பல்வேறு விதமாக நோய்வாய்ப்பட்டு தான் இறப்பதற்கு முன் தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் வாழ வேண்டும் என்ற அவாவோடு வாழ்ந்து வருகிறார்
இந்த தாயார் தான் தன்னுடைய 5 உறவுகளையும் இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு வந்ததாகவும் இவர்களுடனேயே தான் வாழ்ந்து வந்ததாகவும் தான் தற்போது நோய் வாய்ப்பட்டு போராட்டங்களுக்கு கூட செல்ல முடியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தனிமையில் தற்போது வாழ்ந்து வருவதாகவும் எனது ஐந்து உறவுகளையும் என்னுடன் வாழக்கூடிய வகையில் என்னிடம் தருமாறும் தான் நோய்வாய்ப்பட்டு தனக்கு யாரும் அற்ற நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தான் இறப்பதற்கு முன் அவர்களோடு வாழ்வதற்கு தன்னுடைய உறவுகளை தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றார்.
இவர் போன்று பல்லாயிரக்கணக்கான உறவுகள் தன்னுடைய பிள்ளைக்கு என்ன நடந்தது என்று தெரியாமலும் தன்னுடைய கணவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலும் பல்வேறு குழந்தைகள் தன்னுடைய அப்பா எப்போது வருவார் என்கின்ற ஏக்கத்தோடும் இவ்வாறாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினுடைய சோக கதைகள் தொடர்ந்து வருகிறது
நாளாந்தம் தங்களுடைய உறவுகளை தேடி தேடி வீதிகளிலே அலைந்து அழுது புலம்பி நோய் வாய் பட்டவர்களாக மாறி இறந்து போகின்ற நிலைமைகளை தொடர்ச்சியாக நீடிக்கின்றது இவ்வாறானவர்களுக்கான சரியான ஒரு நீதியான விசாரணை சர்வதேச விசாரணை ஊடாக இடம்பெற வேண்டும் என்பதே இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடைய உறவினர்களுடைய கோரிக்கையாக காணப்படுகின்றது.
எனவே இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய வேதனை வாழ்க்கையில் வெகு விரைவிலே அவர்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாத பட்சத்தில் இன்னும் பலர் நோய் வாய்ப்பட்டவர்கள் ஆக மாறி உயிர் இழக்கின்ற சோக வரலாறு மண்ணில் நீடிக்க இருக்கின்றது ஆகவே அனைத்து தரப்பினரும் இணைந்து இவர்களுக்கான ஒரு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.