துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில் அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள அட்டாடர்க் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவத்தினரின் இந்த முயற்சிக்கு அதிபர் டைப்பி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். போலீசாருக்கும் ராணுத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் பினாலி மற்றும் ஜனாதிபதி எர்டோகன் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக பிரதமர் பினாலி, புதிய இடைக்கால தலைமை ராணுவ தளபதியை நியமித்துள்ளார். துருக்கி ராணுவத்தின முதில் நிலை ராணுவ கமாண்டர் ஜெனரல் உமித் டன்டரை புதிய இடைக்கால ராணுவத் தளபதியாக செயல்படுவார் என்று பிரதமர் பினாலி தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவத் தளபதி ஹூலுசி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.