முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்திய வழக்குகள் தொடர்பிலான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்ர, அவரது தாயார் சுமனா பிரேமசந்தர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுகள் நேற்று ( 1) விசாரணைக்கு வந்தது.
நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான, நீதியர்சர்களான யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர ஆகியோரை கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதன்போதே விசாரணையிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்தார்.
முன்னதாக குறித்த மனுக்கலை பரிசீலனை செய்து, அதனை விசாரணைக்கு ஏற்றே உயர் நீதிமன்றம் கடந்த மே 31 ஆம் திகதி துமிந்த சில்வாவுக்கு வழ்னக்கப்பட்ட ஜனடஹிபதி மன்னிப்பை இடைநிறுத்தி, இடைக்கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்தது.
அரசியலமைப்பின் 10, 11, 12 மற்றும் 12(1) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் அடிப்படை உரிமைகள், மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி,
ஹிருனிகா பிரேமசந்ர, அவரது தாயார், சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் சார்பில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த 2021 ஜனவரி 24 ஆம் திகதி ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தார்.
அதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் ஜனாதிபதி பொது மன்னிப்பினை பெற்ற துமிந்த சில்வா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இம்மனுக்கலில் மனுதாரர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராவதுடன் சுமனா பிரேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி திமுத்து குருப்புஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் தமிந்த விஜேரத்ன மற்றும் சுந்தரமூர்த்தி ஜனகன் ஆகியோருடன் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆஜராகின்றார். மற்றொரு மனுதாரரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஆஜராகின்ரார்.
பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஆஜராவதுடன் ஏனைய பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜராகின்றார்.
பொது மன்னிப்பின் பின்னணி :
கடந்த 2021 ஜனவரி 24 ஆம் திகதி பொசன் போயா தினந்தன்று முற்பகல் 11.20 மணியளவில் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா, 1750 நாள் சிறை வாழ்க்கையின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரைகளில் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிப்பது பொருத்தமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களும் பலரும் கையெழுத்திட்டு ஒரு பிரேரனையை ஜனாதிபதிக்கு கையளித்து துமிந்தவுக்கு பிணையளிக்க கோரியிருந்தனர். இவ்வாறான பின்னணியிலேயே அவருக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டது.
தற்போது உயர் நீதிமன்றம் அவரது பொது மன்னிப்பை இடை நிறுத்தியுள்ள நிலையில், மீண்டும் சிறையில் அவர் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.