நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் உடனடியாக மீளாய்வு செய்யப்படும். தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை இற்றை வரை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அடங்கிய விசேட குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் நேற்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர், குறித்த அதிகாரசபையினால் அறிவிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களின் சிக்கல் நிலைமைகள் குறித்து தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
1999 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் எண்ணிக்கை 69 ஆகும். இந்த ஆண்டு அறிவிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் எண்ணிக்கை 42 ஆகும்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையானது தற்போது 273 பிரதேசங்களை நகர அதிகார எல்லைகளாக அறிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, நகர அபிவிருத்தி அதிகார வரம்பாக அறிவிக்கப்பட்டுள்ள எந்தவொரு பிரதேசத்திற்கும் அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பான அமைச்சரால் கடமைப்பட்டுள்ளது. இது 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இல்லையேல் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
உண்மையான அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு மிகவும் பயனுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்துமாறு கூறிய அமைச்சர், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு வருவதற்கு சாத்தியமுள்ள வேலைத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) லலித் விஜேரத்ன, கம்பஹா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹேமால் லக்பதும் மற்றும் கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.