“நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள்… இது இந்தியா அல்ல” –

144 0

 அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மற்றொரு இந்தியர் ஒருவரால் இனரீதியான தாக்குதலை எதிர்கொண்டுள்ளார்.

சில தினங்கள் முன் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் “அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்” என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல மற்றொரு இனவெறி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த முறை இந்தியர் இனரீதியாக தாக்குதலை எதிர்கொண்டது மற்றொரு இந்திய வம்சாவளி நபரிடமிருந்து என்பது தான் சோகம். கிருஷ்ணன் ஜெயராமன் என்ற இந்தியர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஃப்ரீமாண்டில் உள்ள டகோ பெல்லில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு இந்தியரான யூனியன் சிட்டியைச் சேர்ந்த தேஜிந்தர் சிங் என்பவரை கிருஷ்ணன் ஜெயராமனை இனரீதியாக வசைபாடியுள்ளார். இருவருமே தனித்தனியாக அந்த உணவகத்துக்கு உணவருந்த சென்றுள்ளனர்.

அந்த தருணத்தில் இருவருக்குள்ளும் விவாதம் எழ, கோபமான தேஜிந்தர் சிங், “நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இது இந்தியா அல்ல. இனி இதுபோன்று பொது வெளியில் வர வேண்டாம். உனக்கு என்ன வேண்டும்? இந்துக்களாகிய நீங்கள் அவமானம், கேவலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று வசைபாடியதுடன் கிருஷ்ணன் ஜெயராமன் இறைச்சி சாப்பிடவில்லை என்பதை குறிப்பிட்டு மாட்டிறைச்சியை அவரின் முகத்தில் வீசியுள்ளார்.

எட்டு நிமிடத்துக்கும் மேலாக நீட்டித்த இந்த சண்டையை உணவக ஊழியர்கள் போலீஸில் தெரிவிக்க சம்பவ இடத்துக்கு வந்த ஃப்ரீமாண்ட் போலீஸார் இருவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இறுதியில் தேஜிந்தர் சிங்கை கைது செய்ததுடன் அவர் மீது வெறுப்புக் குற்றம், தாக்குதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பேசியுள்ள ஜெயராமன், தேஜிந்தர் சிங்கின் ஆக்ரோஷமான நடவடிக்கையால் தான் பயந்துபோனதாகவும், ஆனால் அவரும் இந்தியர் என்பதை அறிந்து வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.