“தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு… காலணிகளுக்கு கூட நிகரில்லை” – பிடிஆர் vs அண்ணாமலை ட்விட்டரில் மோதல்

146 0

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ட்விட்டரில் சொற்போரில் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் வெடித்தது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன், காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட போது அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்தை விட்டு அமைச்சர் புறப்பட்ட போது அவரின் காரை தடுத்து நிறுத்தி பாஜகவினர் காலணியை வீசினர்.

இந்த வழக்கில் பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், காலணி வீச்சு சம்பவம் நடைபெற்றபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி பிரமுகர் உடன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த ஆடியோ தொடர்பாக மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த ஆட்டின் (சிம்பிள்) பெயரைகூட நான் குறிப்பிட விரும்பவில்லை” என்று பதிவிட்டு, “தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு” என்று குறிப்பிட்டு அண்ணாமலை விமான நிலைய அஞ்சலியில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படத்தையும், காலணி வீசிச்சு தொடர்புடைய சில செய்தித்தாள் படங்களையும் பதிவிட்டிருந்தார்.

அடுத்த சில மணித்துளிகளில் பாஜக தலைவர் அண்ணாமலையும், தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஸ்டர் பிடிஆர், முன்னோர்களின் இன்ஷியலை பயன்படுத்தி மட்டுமே வாழும் உங்களுக்கும், உங்கள் கூட்டாளிகள் போன்றவர்களுக்கு பெருமையுடன் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மகன் சுயமாக வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய பரம்பரையில் பிறந்ததைத் தவிர இந்த ஜென்மத்தில் நீங்கள் என்ன பயனுள்ளதைச் செய்திருக்கிறீர்கள்? நீங்கள் தான் அரசியலுக்கும் எங்கள் மாநிலத்துக்கும் சாபக்கேடு!.

பெரிய விமானங்களில் பயணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தும் எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக, நீங்கள் என் காலணிகளுக்கு கூட நிகரில்லை. அதுபோன்ற ஒன்றைத் திட்டமிட உங்கள் நிலைக்கு நான் ஒருபோதும் இறங்க மாட்டேன். கவலைப்படாதீர்கள்” என்று காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.