இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை

134 0

இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் செயலாளர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நடுத்தர வருமான நாடுகளை விட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இது வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை பாதித்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம், கிட்டத்தட்ட 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் உதவி தேவைப்படுபவர்களாகவும் இருப்பதாகவும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகிறது.