அடக்குமுறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்படுகிறது. அரசாங்கம் பலமானது என்றால் ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டியேற்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் 31 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரை விடுதலை செய்யுமாறும் , அடக்குமுறைகளை நிறுத்துமாறும் வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரினால் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வித முரண்பாடுகளும் வன்முறைகளும் இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்வதற்கான காரணம் என்ன? இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்படும். எதிர்க்கட்சியினராக இருந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை ராஜபக்ஷாக்கள் முழுமையாக உபயோகித்துள்ளனர். ஆனால் இன்று அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மக்களிடமிருந்து அந்த உரிமையைப் பறிக்கின்றனர்.
இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அடக்குமுறைகளை பிரயோகிப்பதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்பதோடு , பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அடக்குமுறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்படுகிறது.
அரசாங்கம் பலமானது என்றால் ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. இந்த அரசாங்கம் சிறிய ஆர்ப்பாட்டங்களுக்குக் கூட அச்சப்படுவதற்கான காரணம் அதன் பலவீனமேயாகும். மக்கள் ஆணையற்ற இந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்குள்ள ஒரே வழி உடனடியாக தேர்தலுக்குச் செல்வதாகும் என்றார்.