பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை

132 0

அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட இருவர் கௌப்பியை கொட்டுவது போன்றும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இரு கைகளையும் ஏந்தி அவற்றை பெற்றுக்கொள்வது போன்றும் வெளியான காட்சிகள் இலங்கைக்கு பிச்சைக் கொடுப்பதை போன்றே இருந்தது.

இந்த சம்பவம் எனக்கு அழுகையை ஏற்படுத்தியது. அத்துடன் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண எந்த வேலைத்திட்டமும் வரவு செலவு திட்டத்தில் இல்லை என எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் ஆழத்தை அறிந்து, அதற்கு ஏற்றால் போன்று இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் அமையும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியிலேயே இருக்கின்றோம்.

இந்த நிலை அதிகரித்து செல்கின்றதே தவிர குறைவதாக தெரியவில்லை. இப்போது செய்யப்பட்டுள்ள சில இறக்குமதி தடைகளால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்களுக்கான மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்காகவே முயற்சிக்க வேண்டுமே தவிர, நெருக்கடிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.

ஆனால் மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து எப்படி எழுவது என்பது தொடர்பான நோக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை. கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கம் முன்நோக்கு இல்லாது செயற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்தது. பீ.பீ.ஜயசுந்தர என்ற பொருளாதார கொலையாளியை ஜனாதிபதியின் செயலாளராக பணிக்கு அமர்த்தி நெருக்கடியை மேலும் கொண்டு சென்றுள்ளார்.

எங்கே அவர்? இந்த நெருக்கடி முன்கூட்டியே அறிந்திருக்கக் கூடியது. இப்போது நாங்கள் நெருக்கடியின் ஆரம்பத்திலேயே இருக்கின்றோம். தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கொண்டு போகின்றன. இன்னும் நெருக்கடிக்குள் போகப் போகின்றோம். எங்கே அவற்றுக்கு தீர்வு.

இந்நிலையில் இங்குள்ள அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்கினால் டொலரை தேட முடியுமா? ஐஓசி, டயலொக் உள்ளிட்ட நிறுவனங்கள் இங்கே ரூபாயில் பணத்தை பெற்று டொலரில் அவற்றை மாற்றி தங்களின் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன. அப்போது டொலர் வெளிநாட்டுக்கு போகாதா?

இதேவேளை நான் தனியாக அழுத சம்பவங்கள் சில உள்ளன. அதில் இந்தியாவின் யாசகர் ஒருவர் இலங்கைக்கு நன்கொடை வழங்கினார். அடுத்ததாக அமெரிக்காவின் தூதுவரும் இன்னுமொருவரும் கௌப்பி கொண்டு வந்தார்கள். அதனை கொண்டு வந்திருந்தால் பக்கற்றை கொடுக்கலாம் தானே. ஆனால் சுசில் பிரேம ஜயந்த பிச்சை எடுப்பவர் போன்று இரு கைகளையும் ஏந்திக்கொண்டு இருக்க, அவர்கள் இருவரும் அவற்றை கொட்டுகின்றனர்.

இதனை பார்த்து ஐயோ என்று தோன்றியது. ஏன் அப்படி கொடுக்க வேண்டும். பக்கற்றை கொடுத்திருக்கலாம் தானே. அதனை விடுத்து கைகளை ஏந்தச் செய்து கொட்டுவது பிச்சைக் கொடுப்பதாக காட்டும் இராஜதந்திர முறை. எமது பிச்சைக் காரர்களும் அதற்குள் சிக்குகின்றனர் என்றார்.