கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார்.
வடஅமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த மாகாண முதல்வராக ஜான் ஹோர்கன் (62) பதவி வகிக்கிறார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக கட்சியின் தலைமை பதவி, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண வீட்டு வசதி, சட்டத் துறை அமைச்சர் டேவிட் எபி (46) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை (32) களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.