பஞ்சப்பள்ளி அணையில் இருந்து 2,520 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

190 0

பஞ்சப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 2,520 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் பஞ்சப்பள்ளி(சின்னாறு) அணை உள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் மூலம் 4,500 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. அணையில் 50 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பஞ்சப்பள்ளி அணைக்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.

அணை நிரம்பும் நிலையை எட்டியபோது மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியது. எனவே, அப்போது மிகக் குறைந்த அளவிலான உபரி நீர் சில நாட்கள் வரை மட்டும் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையில், தற்போது மீண்டும் அணைக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 2,520 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 49.04 அடியாக இருந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 2,520 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பஞ்சப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

எனவே, ஆற்றோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கு மாறும், ஆற்றோர பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.