அதிகார போதையில் மிதக்கிறீர்கள் – கெஜ்ரிவாலை சாடிய அன்னா ஹசாரே

287 0

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு லோக் ஆயுக்தா, லோக்பாலை முற்றிலும் மறந்துவிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதத்தில் கூறியதாவது: நீங்கள் முதல் மந்திரியான பிறகு நான் உங்களுக்கு முதல்முறையாக கடிதம் எழுதுகிறேன்.

அதற்கு காரணம், அண்மையில் வெளியான டெல்லி மதுபான கொள்கை பற்றிய செய்திகள். டெல்லி அரசிடம் இருந்து இப்படியொரு கொள்கையை நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல் மந்திரியான பிறகு லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள்.

சட்டசபையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டுவர முயற்சி செய்யவில்லை. இப்போது, உங்களின் அரசு மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும், உங்களின் வார்த்தைகளும், செயல்பாடுகளும் வெவ்வேறு என்பதைக் காட்ட. மகாராஷ்டிராவில் மதுபான கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது. ஆனால், இன்று டெல்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்த முயன்று, அதனால் ஊழலில் சிக்கியுள்ளது. டெல்லியில் மூலை முடுக்கு எல்லாம் மதுபான கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த ஒரு கட்சிக்கு இதுவெல்லாம் அழகா. நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.