ராஜபக்ஷர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

136 0

ஸ்ரீலன்கன் எயார் லைன் நிறுவனம் பாரியளவில் நஷ்டமடையக் காரணம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களேயாகும். எனவே இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் 6 சதவீதம் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

மறைமுக வரி பாரியளவில் அதிகரித்துள்ளமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் தற்போது உறுதிப்படுத்த முடியாததாகவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக் கொள்வதைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எந்த பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைப்பதாகக் கூறிய பொருhளதார மேம்பாட்டு வேலைத்திட்டம் எங்கே? அதனை முன்வைப்பதில் ஏன் தாமதம்? இதனால் மக்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதிப்புக்களை ஜனாதிபதி பொறுப்பினை ஏற்றுக் கொள்வாரா?

மக்களுக்கு மின்கட்டணம் மாத்திரம் பிரச்சினையல்ல. அதனை தவிர ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலானோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கியூ.ஆர். முறைமை ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தோல்வியடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றுக்கு வாரத்திற்கு வழங்கப்பட்ட 4 லீற்றர் எரிபொருளைக் கூட வழங்க முடியாமல் அவர் தோல்வியடைந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தற்போது ஸ்ரீலங்கன்ஸ் எயார் லைன்ஸ் நிறுவனத்தையும் விற்பதற்கு தீர்மானித்துள்ளனர். இலாமீட்டும் நிலையில் காணப்பட்ட குறித்த நிறுவனத்தை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே மீளப் பெற்றது.

அதனை அரசாங்கம் மீளப் பெற்றதன் பின்னரே பாரியளவு நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கு காரணம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழலாகும். இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.