புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார்

121 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருமேயானால், அதுகுறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை.

மாறாக அவர்கள் முன்வைக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த இணையனுசரணை நாடுகள் என்பதை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளாகவே இருக்கின்றன.

இருப்பினும் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் நியாயமான நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் ஒன்றிணைந்து நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கேள்வி – அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை முன்வைப்பதற்கு ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை தயார்நிலையில் உள்ளதா?

பதில் – இந்த இணையனுசரணை நாடுகள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்கள் சார்ந்திருக்கும் நாடுகளாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிறந்த நிலையிலிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் நல்லிணக்கத்தை நோக்கி நாம் முன்னெடுத்துவரும் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

காணாமல்போனோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு விவகாரம் ஆகியவற்றின் நாம் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை எட்டியிருப்பதுடன் இப்பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டுமென்ற நியாயமான நோக்கத்துடன் செயலாற்றிவருகின்றோம்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை. மாறாக அதற்குரிய தீர்வு தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதுமாத்திரமன்றி புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடனும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை மிகவும் வெளிப்படையாகவே முன்னெடுத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.