பாகிஸ்தான் தென்மேற்கு பருவமழையையொட்டி பலத்த மழை பெய்தது. கடந்த 30 ஆண்டுகள் இல்லாத வகையில் மழை கொட்டியது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த 3 மாதங்களாக மழை பெய்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 110 மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மழை-வெள்ளத்தால் சுமார் 3 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1061 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டு வந்த நிலையில் முதல் முறையாக கடற்படையும் களம் இறக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மந்திரி ஷெர்ரி ரஹ்மான் கூறும்போது, “பாகிஸ்தானில் இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள், கடலின் ஒரு பகுதிகளாக காட்சி அளிக்கின்றன.
ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொருட்களை வீசுவதற்கு கூட இடங்கள் காணப்படவில்லை” என்றார். மழையால் இதுவரை ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை-வெள்ளத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கராச்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.176) ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.143) விற்கப்படுகிறது. இதற்கிடையே இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து காய்கறி இறக்குமதி செய்யப்படுவதால் வரத்து குறைவாக உள்ளது.