கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் ‘சொல் டிஜிட்டர்’ என்ற பெயரில் இணையதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் லீனர் மோண்டிரோ ஆர்டிகா (வயது37), தலியா கான்ட் ரிராஸ் கேண்டில்லோ (39) ஆகிய இருவரும் செய்தியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம் பிடிக்க சென்றனர். சான்டா ரோசா டிலிமா பகுதியில் நடந்த திருவிழாவை படம்பிடித்து, செய்தி சேகரித்துக் கொண்டு அலுவலகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரீபிரஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இருவரும் பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொலம்பியாவில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை மற்றும் படுகொலை சம்பவத்தால் பத்திரிகையாளர்கள் 768 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.