அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாதிரியான உத்தரவு வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிகரித்து உள்ளது.
மேல்முறையீட்டு வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே உத்தரவு வரும் என்று எடப்பாடி அணியினர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் மீண்டும் தங்களுக்கு ஆதரவான உத்தரவே ஐகோர்ட்டில் வரப்போகிறது என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். தரப்பு இணைந்து செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தும் அதனை ஏற்க எடப்பாடி மறுத்து விட்டதால் இருதரப்பிலும் 2 அணிகளாகவே செயலாற்றி வருகிறார்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இருக்கும் நிலையில் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு உள்ளனர். அ.தி.மு.க.வில் 65 எம்.எல்.ஏ.க்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மட்டுமே இருந்து வந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமாக இருந்த அய்யப்பன் எம்.எல்.ஏ. ஓ.பி.எஸ். அணிக்கு தாவி உள்ளார்.
இவரை போன்று பல எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ். தரப்பினர் முயற்சித்து வருகிறார்கள். இப்படி 40 எம்.எல்.ஏ.க்களையாவது தங்கள் அணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பம்பரமாக சுழன்று செயலாற்றி வருகிறார்கள். இதற்காக எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பி.எஸ். அணியின் முன்னணி நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின் போது ஐகோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ். தரப்பினரின் இந்த முயற்சிக்கு சசிகலா, தினகரன் இருவரும் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களோ ஓ.பி.எஸ்.சின் இந்த ஆள் பிடிக்கும் வேலை எடுபடாது என்றே கூறுகிறார்கள். எங்கள் பக்கம் இருக்கும் யாரும் ஓ.பி.எஸ். பக்கம் செல்வதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்ததையும், பொருட்களை திருடி சென்றதையும் எந்த அ.தி.மு.க. தொண்டனும் மறக்கவில்லை. எனவே அவர் பின்னால் செல்வதற்கு எடப்பாடி அணியில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றும் ஓ.பி.எஸ். அணியின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்காது என்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். எனவே ஐகோர்ட்டு தடைகளை தகர்த்து எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையுடன் அ.தி.மு.க.வை வழி நடத்துவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.