காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகினார். தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியதற்கு காரணம் ராகுல் காந்தியின் சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கைகள்தான் என்று விமர்சித்தார். குலாம் நபி ஆசாத்தின் கருத்துக்களுக்கு எதிர்ப்பும் உள்ளன. ஆதரவும் உள்ளன. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குலாம் நபி ஆசாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. குலாம் நபி ஆசாத் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தவர். கட்சியில், ஆட்சியில் மிக முக்கியமான பதவிகளை வகித்தவர். இப்போதுதான் ராகுலிடம் குறைகள் இருப்பது அவருக்கு தெரிந்ததா?
இந்த குறைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டு வெளியேறி இருக்கலாமே. ஏன் போகவில்லை. மரத்தில் நிறைய பழங்கள் பழுத்து கிடந்தால் பறவைகள் இருக்கும். பழங்கள் இல்லை என்றால் பறவைகளும் பறந்து விடும்.
அதேபோல்தான் காங்கிரசிலும் நடக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி இருந்தது. அதாவது பழங்கள் பழுத்தது. அதுவரை அனுபவித்தார்கள். இன்று அனுபவிப்பதற்கு எதுவுமில்லை. அவ்வளவு தான். பறவைகள் பறப்பது போல் பறக்கிறார்கள். நிச்சயமாக குலாம் நபி ஆசாத்தைபோல் வேறு யாரும் செல்லமாட்டார்கள். வரும் காலத்தில் ராகுலின் தலைமையில் காங்கிரஸ் புதிய எழுச்சி பெறும். அதற்கு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் செல்லும் பாத யாத்திரை மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.