ஓபிஎஸ் அணி கை ஓங்குகிறது : அமைச்சர், 4 எம்பி ஆதரவு

321 0

அதிமுக உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மேலும் 4 எம்பிக்கள் நேற்று ஆதரவு தெரிவித்தனர். மூத்த தலைவர் பொன்னையனும் அணி மாறி விட்டார். இதனால் சசிகலா நடராஜன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதால், அவரது அணி உற்சாகம் அடைந்துள்ளது. மேலும் 30 எம்எல்ஏக்கள் வருவதாக தூது அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த 7ம் தேதி இரவு, ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று சுமார் 40 நிமிடம் மவுன விரதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அவர், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜனுக்கு எதிராக, பரபரப்பு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். அதில், குறிப்பாக, தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். அவர் பேட்டி கொடுத்த மறுநிமிடமே, அதிமுகவில் பெரும் அதிர்ச்சியலை ஏற்பட்டது. ஆதரவு குவிகிறது: முதன் முறையாக சசிகலா நடராஜனை எதிர்த்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

சென்னை ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு தினமும் ஏராளமான அதிமுக முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை அதிமுக மாநிலங்களவை எம்பி மைத்ரேயன், அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி. சண்முகநாதன் (வைகுண்டம்), மனோரஞ்ஜிதம் (ஊத்தங்கரை), ராஜமாணிக்கம் (சோழவந்தான்), ஆறுகுட்டி (கவுண்டம்பாளையம்), மனோகரன் (வாசுதேவநல்லூர்) ஆகிய 5 ேபரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் கவுன்சிலர்கள் முதல்வரை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

அதிகாரம் இல்லை: ஓபிஎஸ்.சுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சசிகலா நடராஜன், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி வருகிறார். குறிப்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கடந்த செவ்வாய் கிழமையன்று, அவரது அதிமுக பொருளாளர் பதவியை சசிகலா நடராஜன் பறித்தார். மேலும், அவைத் தலைவர் மதுசூதனின் பதவியையும் சசிகலா பறித்தார். பதவி பறிக்கப்பட்டவர்கள், ‘’எங்களை கட்சியில் இருந்து நீக்க சசிகலாவுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. நாங்கள் அவரை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டோம். விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும். கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்கள், வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள்’’ என்று அதிரடியாக அறிவித்தனர்.

எம்பிக்கள் வருகை: இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்பி அசோக்குமார், நாமக்கல் தொகுதி எம்பி பி.ஆர்.சுந்தரம், திருப்பூர் தொகுதி எம்பி சத்தியபாமா ஆகியோர் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தனர். அங்கு ஓ.பி.எஸ்.சை நேரில் சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதிமுக எம்பிக்கள், அடுத்தடுத்து ஓபிஎஸ். அணியில் சேர்ந்தது சசிகலா அணிக்கு பெரும் அதிர்ச்சியையும், தொடர்ந்து சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு சசிகலா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காலையில் அணி மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சசிகலா நடராஜனுக்கு ஏற்பட்டது. நேற்று பகல் 1 மணியளவில் கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்தார்.

முதல் முறையாக ஒரு தமிழக அமைச்சர் ஓபிஎஸ் அணிக்கு வந்துள்ளதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மா.பா.பாண்டியராஜன் ஓபிஎஸ்சுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக செய்தி தொடர்பாளர் ெபான்னையனும் முதல்வர் ஓ.பி.எஸ்.சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.  அது மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத், முன்னாள் எம்பிக்கள் பி.ஜி.நாராயணன், அன்பழகன், ஸ்ரீதர், முன்னாள் எம்எல்ஏக்கள் இளவழகன், பதர் சயீத், அரங்கநாயகம், தவசி, பரிதி இளம்வழுதி, பாபு முருகவேல், இந்திய தேசிய முஸ்லீம் லீக் தலைவர் ஓய்.ஜவஹர் அலி, அகில இந்திய ேதசிய லீக் தலைவர் இதயதுல்லா உள்ளிட்ட நிர்வாகிகளும் ஓ.பி.எஸ்.சை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் திரு வண்ணாமலை எம்.பி. வனரோஜா, ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித் தார். ஒவ்வொருவராக ஓ.பி.எஸ். அணியில் சேர்வதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் சசிகலா தரப்பினர் அதிர்ந்து போய் உள்ளனர். தொடர்ந்து ஓபிஎஸ்.சை சந்திக்க அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓ.பி.எஸ் இல்லம் தொடர்ந்து பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. அவரது இல்லம் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதை தொடர்ந்து ஓ.பி.எஸ். இல்லம் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஓ.பி.எஸ்.அணிக்கு மாநிலங்களவை எம்பி மைத்ரேயன் மற்றும் மக்களவை எம்பி  அசோக்குமார், பி.ஆர்.சுந்தரம், சத்தியபாமா, வனரோஜா என 5 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30 எம்எல்ஏக்கள் தூது: ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் தனியாக பேசினார். மேலும் பல மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ். அணிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வருகிற நாட்களில் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் தங்கள் அணியில் இருந்து வெளியே சென்றுவிடக்கூடாது என்று சசிகலா நடராஜன் தரப்பால், மகாபலிபுரம் அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறைமுகமாக அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசி வருகிறார்கள். சசிகலா பாதுகாப்பில் ஓட்டலில் தங்கியுள்ள சுமார் 30 எம்எல்ஏக்கள் தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள், பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தூது அனுப்பியுள்ளனர். தற்போது, மன்னார்க்குடி குண்டர்களின் பாதுகாப்பில் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக வெளியே வர முடியவில்லை. சட்டமன்றத்தில், யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறீர்கள் என்ற சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தான் வாக்களிப்போம் என்று இந்த 30 எம்எல்ஏக்களும் உறுதியாக கூறி உள்ளனர். இந்நிலையில் மேலும் அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை பெற, ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் தற்போதைய எம்பி மைத்ரேயன் ஆகிய 3 பேர், அதிமுக எம்எல்ஏக்களுடன் மறைமுகமாக பேசி வருகிறார்கள். ஒரு சில எம்எல்ஏக்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களின் உறவினர்கள் மூலம் ஆசை வார்த்தை கூறி தங்கள் பக்கம் இழுக்க இந்த 3 பேர் அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மேலும் பல அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

அடுத்து நட்ராஜ்?

அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களை இழுப்பதில் இரு அணியினரும் போட்டி போட்டு வருகின்றனர். சசிகலா அணியிடம்தான் அதிக அளவில் எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் ஒவ்வொருவராக வெளியேறி, ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் எம்எல்ஏவுமான நட்ராஜ், சசிகலா அணியில் இருந்தார். இப்போது திடீரென்று தான் மக்களின் மனசாட்சியை அறிந்து நடுநிலை வகிக்கிறேன். மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ, அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவரும் ஓபிஎஸ் அணிக்கு மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.