அரசியலுக்கு வருகிறார் விமுக்தி குமாரதுங்க;புதிய கட்சியில் இணையவும் தீர்மானம்

117 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா கட்சியின் கீழ் இது இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

புதிய கட்சி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர்களுடனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில பழைய உறுப்பினர்களுக்கு தொலைபேசி செய்திகளை வழங்கி, இது குறித்து தம்முடன் கலந்துரையாட வருமாறு கோரியுள்ளார்.

புதிய கட்சியில் இணையுமாறு விமுக்தி குமாரதுங்கவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குமார வெல்கம எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சியின் தலைமையகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி பத்தரமுல்லையில் ஸ்தாபிக்கப்படும் எனவும் அதன் பின்னர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் கட்சி அமைப்புகள் ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியும் ஆசி வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.