மருத்துவ மாணவர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை

474 0

201607161040511476_MK-Stalin-seeks-CBI-probe-over-medical-student-death_SECVPFதிருப்பூர் வெள்ளியங்காடு அருகே உள்ள கோபால்நகர் 4-வது வீதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கணேசனின் மகன் சரவணன்(வயது 26), மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து படித்து வந்தார்.

கடந்த 10-ந்தேதி காலையில் சரவணன் தனது அறையில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். அவர் வி‌ஷ மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திருப்பூர் வந்தார். பின்னர் அவர் டாக்டர் சரவணன் வீட்டிற்கு சென்றார். அங்கு சரவணன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் சரவணனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–டெல்லியில் திருப்பூரை சேர்ந்த டாக்டர் சரவணன் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் காரணமாக நேரில் வந்து, சரவணனை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், இரங்கலை தெரிவித்தேன். அப்போது சரவணனின் பெற்றோர், தங்கள் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பியுள்ளனர். மாவட்ட கலெக்டரை சந்தித்து சரவணன் மரணம் தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர். இதையே நானும் எதிர்பார்க்கிறேன்.

மாநில அரசு மத்திய அரசுடன் பேசி இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலை வெளியே வரும். அதற்கான முயற்சியை தமிழக அரசு செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

அப்படி விசாரிக்கும் போது தான் உண்மை வெளியே வருவதுடன் இது போன்று தமிழகத்தில் இருந்து வெளிமாநில மாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு தைரியம் ஏற்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.