2021-22-ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையததிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என்று 13.9.2021 அன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, காவல்நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசு தாரர்கள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் என மொத்தம் 912 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடத்திற்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் இரயில்வே காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படுவர். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (நலன்) சைலேஷ் குமார் யாதவ், ஆகியோர் கலந்து கொண்டனர்.