கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் அண்மையில் சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், ”கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தகுதி வாய்ந்த பொறுப்பு வைத்திய அதிகாரி நியமிக்கப்படவில்லை எனவும் மாகாண சுகாதார அமைச்சினால் இதுவரை காலமும் வெற்றிடமாக காட்டப்பட்டு வந்த குறித்த பதவியின் வெற்றிடம் மத்திய அமைச்சினால் எவ்வாறு நீக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
வட மாகாணத்தின் தொடர் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்றமையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கான தேவைகளை நிறைவு செய்வதிலும் ஆளனி வெற்றிடங்களை நிரப்புவதிலும் மாகாண அரசுகள் பின்னடைந்து வருகின்றன.
மேலும் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான நிரந்தர பொறுப்பு வைத்திய அதிகாரி நியமிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இதனால் சிரேஷ்ட மருத்துவ நிர்வாக உத்தியோகத்தர் தரத்திலுள்ள ஒருவரை நியமிக்க வேண்டிய இடத்தில் தற்போது மருத்துவ உத்தியோகத்தர் தரத்திலுள்ள ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் கடந்த காலங்களில் மத்திய சுகாதார அமைச்சினால், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பதவி வெற்றிடம் காட்டப்பட்டு வந்துள்ளதுடன் அதற்கான வெற்றிடம் நிரப்பபடாமலே தற்போது அப்பதவி வெற்றிடம் நீக்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டபட்டுள்ளது.