இலங்கையிலிருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக 8 அகதிகள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி பொலிஸார் அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட எட்டு அகதிகளை மீட்டு மண்டபம் தமிழக கடலோர காவல் படை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் பொலிஸார் அகதிகளை மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மன்னார் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சசிகுமார் (வயது 30), இவரது மகன் மோஹித் (7), மகள் சுபிஸ்கா(9), யாழ்பாணம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் மனைவி ஜெயந்தினி (30), மகள் இனியா (10), மகன்கள் ஹரி ஹரன்(9), தனுசன் (4) மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்துமதி(65) என தெரியவந்தது.
மேற்கொண்டு நடத்திய விசாரணையில் இவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிழைப்பதற்கு வழியில்லாமல் தவித்து வந்ததாகவும், தலா ஒரு இலட்சம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் தலைமன்னார் கடல் பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.