அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என தீர்ப்பளித்து, அவரை தடுத்து வைத்துள்ள உத்தரவை இரத்து செய்து அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்காக சட்டத்தரணி ரவிநாத் பின்னதுவகே, தன்னையே மனுதாரராக பெயரிட்டு இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகர, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், பேலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் களுவித்தாரன, பாதுகாப்பு செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ரஜ ரட்ட பல்கலைக் கழகத்தின் தொள் பொருள் தொடர்பிலான கற்கை பிரிவின் மாணவனான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கோட்டா கோ கம போராட்ட கலத்தின் முக்கிய பங்களிப்பாளர் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக மாணவனாக நாட்டில் பல்வேறு சமூக பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுக்காக நேரடியாக பங்களிப்பினை மனுதாரர் வழங்கியுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கடந்த 18 ஆம் திகதி அனீதியான முறையில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையெழுத்துடன் கூடிய தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தங்காலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவ்கூக் அவரது சட்டத்தரணியுடன் சந்திக்க சந்தர்ப்பம் அளுக்குமாறும், மனுவை விசாரணைக்கு ஏற்று அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள 11,12(1),13(1), 13(2),13(3), 13(4), 14(1) அ, 14(1) இ மற்றும் 17 ஆம் உறுப்புரைகளின் கீழான அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.
அத்துடன், தனது கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது என அறிவித்து, தன்னை தடுப்பிலுருந்து விடுவிக்குமாறும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரப்பட்டுள்ளது.