அங்கோலா நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்கோலா நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில், உய்கே நகரில் ‘ஜனவரி-4’ என்ற மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் உள்ளூர் லீக் கால்பந்து போட்டிகள் நடந்து வந்தன.
நேற்று முன் தினம் சாண்டா ரிட்டா டி கேசியா- ரெக்ரீடிவோ டி லிபோலா என்ற அணிகள் இடையேயான பரபரப்பான ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆட்டத்தைக் காண்பதற்கு ரசிகர்கள் கூட்டம் வெள்ளம்போல திரண்டிருந்தது.
அந்த மைதானத்தில் 8 ஆயிரம் பேர் மட்டுமே அமர்ந்து போட்டியை பார்க்க முடியும். ஆனால் அதை விட அதிக எண்ணிக்கையில் கூட்டம் திரண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டம் தொடங்குகிற நேரத்தில் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வீரர்களும் மைதானத்திற்கு வந்து ஆட்டத்துக்கு தயாராக நின்றனர். நுழைவு வாயிலையொட்டி கூட்டத்தினர் மொத்தமாக நுழைந்து விடமுடியாத வகையில் ஒரு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு முண்டியடித்தது. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முற்பட்டனர். அப்போது பலர் தடுமாறி கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏறிச்செல்லுகிற அவலம் நேரிட்டது. கீழே விழுந்தவர்கள் அலறித்துடித்தனர்.
கூட்ட நெரிசலிலும், மூச்சு திணறலிலும் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் ஆவர்.56 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறும்போது, “இந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு ஏராளமானோர் டிக்கெட் வாங்காமல் வந்திருந்தனர். அவர்களும் மைதானத்திற்குள் நுழைய முற்பட்டனர்” என்றனர்.ரெக்ரீடிவோ டி லிபோலா கிளப் சார்பில் அதன் இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “ எங்கள் அணிக்கும், சாண்டா ரிட்டா டி கேசியா அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் வீரர்கள் மைதானத்தில் இறங்கிவிட்டனர். அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக முண்டியடித்துக்கொண்டு உள்ளே வர முயற்சித்தனர். அப்போதுதான் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, அவர்கள்மீது மற்றவர்கள் ஏறிச்செல்கிற நிலை உருவாகி விட்டது” என கூறப்பட்டுள்ளது.அங்கோலாவில் கால்பந்து போட்டி ஒன்றின்போது கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இந்த சம்பவம், அங்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.