எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
எகிப்து நாட்டை சேர்ந்த 500 கிலோ குண்டு பெண், எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 36). இவருக்கு 11 வயது ஆனபோது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் அவர் மிகவும் குண்டானார்.
படுக்கையிலேயே சுமார் 25 ஆண்டுகள் கழிந்தநிலையில், தற்போது எமான் 500 கிலோ எடையுடன் உள்ளார். இவர் உலகிலேயே மிகவும் குண்டான பெண்ணாகவும் கருதப்படுகிறார்.
எமான் தனக்கு உடல் பருமனை குறைக்க தேவையான சிகிச்சை அளிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த டாக்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் யாரும் முன்வரவில்லை. அவருக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால் உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை இலவசமாக செய்ய முன்வந்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம், எமானுக்கு மருத்துவ விசா வழங்குமாறு டாக்டர் முப்பஷால் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இதன்மூலம் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து எமான் நேற்று அதிகாலை 4 மணியளவில் மும்பை அழைத்துவரப்பட்டார். இதற்காக விமானத்தில் சிறப்பு படுக்கை தயாரிக்கப்பட்டு இருந்தது. முன்எச்சரிக்கையாக அனைத்து அவசரகால மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களும் விமானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
மும்பை விமான நிலையம் வந்தடைந்த எமான் அவசரகால மருத்துவ வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருந்த லாரியில் ஏற்றப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு காலை 6 மணிக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர், அவர் லாரியில் இருந்து கிரேன் மூலம் ஆஸ்பத்திரியில் அவருக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக அறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் எமானுக்கு 3 மாதங்கள் உடல் எடை குறைப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவருக்கு துணையாக அவரது சகோதரி சைமாவும் உடன் வந்துள்ளார். இந்த சிகிச்சையின் மூலம் தனக்கு நிச்சயம் தகுந்த பலன் கிடைக்கும் என்று எமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.