அல்பேனியாவைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க அருட்தொண்டரான அன்னை தெரசா 1910-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். குடியுரிமை பெற்று தன் வாழ்நாளின் பெரும் பகுதியினை இந்தியாவில் கழித்தார். கொல்கத்தாவில் கத்தோலிக்க சமய சபையை நிறுவி, ஏழை எளியோர், நோய்வாய்ப்பட்டோர், ஆதரவற்றோர்களுக்கு நாற்பது வருடங்களுக்கும் மேலாக தொண்டாற்றியுள்ளார். மிகச் சிறந்த சமூக சேவகராக உலகம் முழுவதும் புகழப்பட்டவர்.
அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா உட்பட பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளையும், இந்தியா மற்றும் பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார். அருங்காட்சியகம், கல்வி நிறுவனம், சாலை என பல்வேறு இடங்களுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பின்பற்றத்தக்க எத்தனையோ கருத்துகளை அவர் உதிர்த்திருக்கிறார். அவற்றில் 10 மேற்கோள்கள் இங்கே…
- “எப்போதும் புன்னகையுடன் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வோம், ஏனென்றால் புன்னகையே அன்பிற்கான தொடக்கம்.”
- “தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும்.”
- “ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை.”
- “சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை உள்ளது.”
- “மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.”
- “உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்.”
- “நாம் இந்த வேலையை செய்கிறோம் என்பது அற்புதமல்ல, அதை செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே அற்புதம்.”
- “நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.”
- “நம் அனைவராலும் உயர்ந்த விஷயங்களைச் செய்யமுடியாது. ஆனால், உயர்ந்த அன்பைக் கொண்ட சிறிய விஷயங்களைச் செய்யமுடியும்.”
- “அன்பான வார்த்தைகள் பேசுவதற்கு எளிதாகவும் சுலபமாகவும் இருக்கும், ஆனால் அதன் எதிரொலிகள் உண்மையிலேயே முடிவில்லாதவை.”
| ஆக.26 – இன்று அன்னை தெரசா பிறந்த தினம் |