சசிகலா எச்சரிக்கை எதிரொலி – ஆளுநர் மாளிகையில் போலீஸ் குவிப்பு

373 0
அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று முன் தினம்  இருவரும் சந்தித்துப் பேசினர்.
அப்போது சசிகலா, அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடித்தத்துடன், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரினார். அதற்கு, ஆளுநர் தரப்பிலிருந்து இன்னமும் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
இன்று பிற்பகலில், போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்களிடம் பேசிய சசிகலா, “ஓரளவுக்குத் தான் பொறுமையைக் கையாள முடியும். அதற்குமேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம்.” என எச்சரிக்கை விடும் தொனியில் பேசியிருந்தார்.மேலும், இன்று எம்.எல்.ஏ.க்களுடன் வந்து சந்திக்க அனுமதி அளிக்கும்படி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எனவே, அ.தி.மு.க.வினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடலாம் எனவும், சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.