ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டதையடுத்து, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில், ‘தேசியப்பட்டியல் வெற்றிடமொன்று ஏற்பட்டால் ரஞ்சன் ராமநாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்போம் என்று உறுதியளிக்கின்றோம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
ஹரின் பெர்னாண்டோ, திஸ்ஸ அத்தனாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாகீர் மாக்கார், மயந்த திஸாநாயக்க, எரான் விக்கிரமரத்ன மற்றும் டயானா கமகே ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாவர்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை நீங்கியதையடுத்து அடுத்த விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அஜித் மன்னம்பெரும அந்த இடைவெளிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே அவரை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.