இலங்கை அரசாங்கத்தின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை விதிப்பு மற்றும் தடை நீக்க செயன்முறைகள் சட்டவிரோதமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் அமைப்புக்களும், தனிநபர்களும் பயங்கரவாத தடை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் குறித்த நபர்களும் அமைப்புக்களும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதோடு தடை செய்யப்படுவதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.
எனினும் அவ்வாறான சட்ட ரீதியான செயல்முறைகள் எதுவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினரால் பின்பற்றப்படவில்லை. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது வர்த்தமானியின் மூலம் விதிக்கப்பட்ட தடை மற்றும் தடை அகற்றப்பட்டமையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஏனெனில், அவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான செயல்பாடுகள்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை எனவும், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.