கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றிய அவரின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச தனது தம்பி ஜனாதிபதியாக அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் என்று கூறியது எல்லோருக்கும் நினைவிருக்கும்.மக்கள் கிளர்ச்சியையடுத்து பதவி விலகிய பின்னராவது மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் குடும்பத்தின் மூத்தவர் அவ்வாறு கூறியிருக்கக்கூடும்.
ஆனால், மகிந்த அண்ணனின் அறிவுரையை கருத்தில் எடுத்ததாக தெரியவில்லை ; அரசியல் வாழ்வை தொடரவே விரும்புகிறார்.மக்கள் கிளர்ச்சிக்கு முன்னர் இலங்கையில் அமோக செல்வாக்கு கொண்ட அரசியல்வாதியாக விளங்கிய அவர் இப்போது பொதுவெளியில் பெரிதாக காணப்படுவதில்லை.அவ்வப்போது பாராளுமன்ற அமர்வுகளுக்கு வந்துபோகிறார்.
4 மாதங்களுக்கு பிறகு முதற்தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மகிந்த நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அவரிடம் சண்டே ரைம்ஸின் அரசியல் விவகார ஆசிரியர் அரசியல் எதிர்காலம் குறித்து கேட்டபோது,” நான் அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன்.பொருத்தமான தருணம் வரும்போது மாத்திரமே ஓய்வுபெறுவேன்.அதுவரை நான் அரசியலை விட்டு போகமாட்டேன் ” என்று பதிலளித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் தொடருவீர்களா என்ற கேள்விக்கு அது கட்சி தீர்மானிக்கவேண்டிய விடயம் என்று குறிப்பிட்ட அவர் அவ்வாறு கட்சி தீர்மானிக்காவிட்டாலும், சட்டத்தொழிலில் தன்னால் ஈடுபடமுடியும் ; அவசியம் ஏற்படுமானால் கட்சித்தலைவர் பதவியை விட்டு செல்வதற்கு தாயாராகவே இருப்பதாகவும் கூறினார்.
தானும் குடும்பத்தவர்களும் நீண்டகாலம் ஆட்சியதிகாரத்தில் இருக்கவேண்டும் என்று விரும்பியவர் மகிந்த.அதனால்தான் தனது 2 வது ஜனாதிபதி பதவிக்காலத்தில் 2010 பிற்பகுதியில் 18 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்து அதுகாலவரை ஜனாதிபதிக்கு இருந்த இரு பதவிக்கால வரையறையை ரத்துச் செய்தார்.மக்கள் தெரிவு செய்வார்களேயானால் ஒருவர் எத்தனை பதவிக்காலங்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை என்பது அவர் அந்த நேரத்தில் முன்வைத்த வாதம்.
இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையை பெறுவதற்காக 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய அவர் அதில் தோல்வியைத் தழுவினார்.ஆனால்,அதே வருடம் ஆகஸ்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு குருநாகல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.நாட்டின் அதியுயர் பதவியில் இருந்துவிட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்த முதல் இலங்கை ஜனாதிபதி அவரே.அவர் தொடக்கிவைத்த அந்த பிறழ்ச்சியான அரசியல் நடைமுறைையைப் பின்பற்றி அடுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் வந்திருக்கிறார்.
மக்கள் கிளர்ச்சியை அடுத்து கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறி தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் நாடு திரும்பும் பட்சத்தில் அவரையும் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்படுவதாக கடந்தவாரம் செய்திகள் வெளியாகின.அவரும் சபைக்கு வருவாரேயானால், பாராளுமன்ற உறுப்பினராகும் மூன்றாவது முன்னாள் ஜனாதிபதியாக விளங்குவார்.
இவர்கள் எல்லோரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருந்துவிட்டு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவதில் எந்த அசௌகரியத்தையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை.இதைப் பார்க்கும்போது ஜனாதிபதியை இனிமேல் ‘ அதிமேதகு ‘ என்று சிறப்பித்து அழைக்கத்தேவையில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தது மிகவும் பொருத்தமானது என்றே தெரிகிறது.
2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவும் பெற்ற அமோக வெற்றியையடுத்து குறைந்தது 25 வருடங்களுக்கு ராஜபக்சாக்களே ஆட்சியில் இருக்கப்போகிறார்கள் என்று கூறிய பல அரசியல் ‘ அவதானிகள் ‘ இருக்கிறார்கள். தற்போதைய வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியும் கூட மூன்று வருடங்களுக்கு முன்னர் குறைந்தது 20 வருடங்களுக்கு ராஜபக்சாக்கள் ஆட்சியில் இருக்கப்போவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூட்டம் ஒன்றில் கூறியதை காண்பிக்கும் காணொளி கடந்த மாதம் கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிய நாட்களில் சமூக ஊடகங்களில் பரவலாக பதிவாகியதை காணக்கூடியதாக இருந்தது.
கோட்டாவுக்கு பிறகு பசில், அடுத்து நாமல் என்று எதிர்கால ஜனாதிபதிகள் வரிசையொன்றைக் கூட அந்த குடும்பம் மனதில் கொண்டிருந்தது.ஆனால், இரண்டரை வருடங்களுக்குள் தங்களது ஆட்சிக்கு எதிராக இதுகாலவரை இலங்கை வரலாறு காணாத வகையில் மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தில் இருந்து விரட்டுவார்கள் என்று ராஜபக்சாக்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு தடவை கேட்கப்பட்டபோது தனக்கு இன்னொரு பதவிக்காலம் இருக்கிறது என்று கோட்டாபய கூறியது நினைவில் இருக்கிறது. இன்று எந்தவொரு ராஜபக்சவும் அதிகாரப்பதவிகளில் இல்லை.
இலங்கை அரசியலில் முன்னரும் குறிப்பிட்ட சில உயர்வர்க்க குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தின.சேனநாயக்க,பண்டாரநாயக்க குடும்பங்களை உதாரணத்துக்கு கூறலாம். ஐக்கிய தேசிய கட்சி ஒரு காலத்தில் மாமன் — மருமகன் கட்சி என்றே அழைக்கப்பட்டது.இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை பண்டாரநாயக்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தவிர வேறு எவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்துக்கு வருவது குறித்து நினைத்துப்பார்த்திருக்கமுடியாது.
ஆனால், அந்த குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்த அரசியல் கட்சிகள் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்து இறங்கியதும் பிறகு மீண்டும் தேர்தல்களில் வென்று பதவிக்கு வந்ததும் வரலாறு.ஆனால், ராஜபக்ச குடும்பத்தை மக்கள் படுமோசமாக வெறுத்து அவர்கள் எல்லோரும் அரசியலில் இருந்து வெளியேறவேண்டும் என்று கொந்தளித்ததைப் போன்று அந்தக் குடும்பங்கள் அபகீர்த்திக்குள்ளாகவில்லை.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் சுமார் 90 வருடங்களாக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டுவந்திருக்கின்ற போதிலும், மகிந்த 2005 ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பிறகு தான் அந்த குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய உறவினர்களும் அவர்களை சார்ந்தவர்களும் நாகரிக உலகம் வெறுக்கத்தக்க முறையில் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் மட்டுமீறிய செல்வாக்கைச் செலுத்தத்தொடங்கினார்கள்.ராஜபக்ச அரசாங்கம் முன்னென்றும் இல்லாத படுமோசமான ஊழலுடனும் அதிகார துஷ்பிரயோகத்துடனும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவுடனும் அடையாளப்படுத்தப்பட்டது.குடும்ப ஆதிக்க அரசியலை ராஜபக்சாக்கள் அதன் உச்சத்துக்கு கொண்டு சென்றார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆட்சிமுறையில் எதேச்சாதிகாரம் படிப்படியாக அதிகரித்துவந்திருக்கிறது. ஆனால், அந்தப் போக்கு மிகவும் மோசமாக தீவிரமடைந்ததை ராஜபக்ச அரசாங்க காலத்திலேயே காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை பொருளாதாரத்தை தவறான முறையில் முகாமைத்துவம் செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்ததில் ராஜபக்சாக்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.
சண்டே ரைமஸ் நேர்காணலில் மகிந்த நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் கோட்டாபய பொறுப்பு அல்ல.தான் உட்பட முன்னைய அரசாங்கங்களும் அதற்கு பதில் கூறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இடையில் ஒரு நான்கு வருடங்களைத் தவிர 13 வருடங்களாக ராஜபக்ச அரசாங்கமே பதவியில் இருந்திருக்கிறது. அதில் 2005 — 2015, 2019 — 2021 காலகட்டங்களில் நிதியமைச்சராக மகிந்தவே பதவி வகித்தார். தவறான பொருளாதார முகாமைத்துவத்தில் தனக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.
அடுத்து தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை, உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பு மகிந்தவுக்கு இருந்தது.வரலாறு வழங்கிய அந்த அரிதான வாய்ப்பை அவர் வேண்டுமென்றே அலட்சியம் செய்து பெரும்பான்மையினவா அரசியலை தீவிரப்படுத்தி மக்கள் மத்தியில் பிளவை மேலும் ஆழப்படுத்தியதையே காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறாக ஆட்சிமுறையின் சகல முனைகளிலும் கெடுதியான போக்குகளை ஊக்குவித்த மகிந்த தொடர்ந்தும் அரசியலில் இருந்து எதைச் சாதிக்கப்போகிறார் என்று விளங்கவில்லை.தனது குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து அவருக்கு இலட்சியம் இருக்கக்கூடும்.ஆனால், 2015 தேர்தல் தோல்விக்குப் பிறகு அவர்கள் மீண்டெழுவதற்கு வாய்ப்பாக அமைந்த சூழ்நிலையும் மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான இன்றைய சூழ்நிலையும் முற்றிலும் வேறுபட்டவை.
தனது மூத்த புதல்வன் நாமலின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் குறித்து மகிந்த நிச்சயம் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.அதை உறுதிப்படுத்தும் வரை அரசியலில் நிலைத்திருக்க அவர் தீர்மானித்திருக்கக்கூடும்.
பிலிப்பைன்ஸில் சர்வாதிகாரி பேர்டினண்ட் மார்கோஸ் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டைவிட்டு தப்பியோடி 36 வருடங்கள் கடந்த நிலையில் அவரது மகன் பொங்பொங் மார்கோஸ் கடந்த மே மாதம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்திருக்கிறார். அவ்வாறு இலங்கையிலும் நேரும் என்று ராஜபக்சாக்கள் நம்பிக்கையை வளர்க்கக்கூடும்.
வீரகத்தி தனபாலசிங்கம்