இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விசாரணைப் பொறிமுறைக்கு சிறீலங்கா அரசாங்கமானது ஒப்புதல் அளித்த செயற்பாடானது, சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் ஒரு உத்தியென முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டின் மூலச் சட்டத்தில் நீதிச் சட்டத்தை மீறிச் செயற்படும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை.இலங்கையின் அரசியலமைப்பை மூலச் சட்டமாகப் பயன்படுத்தியே அனைத்துத் துறைகளும் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டவாக்கச் சபைக்கும் நீதித்துறைக்குமிடையில் பகிரப்படும் அதிகாரம் முக்கியத்துவமாகும்.
மக்களின் ஆணையின்படி சட்டவாக்கச் சபைக்கு சட்டங்களைப் பிறப்பிக்கும் அதிகாரம் இருந்தாலும் அதனை அமுலாக்கும் அதிகாரம் நீதித்துறைக்கே உள்ளது.சட்டங்களை மறுசீரமைக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் கோரப்படவேண்டும். இவ்வாறு மூலச் சட்டத்தில் அனைத்து விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இதனை மீறிச் செயற்படும்போதுதான் அது சட்டத்துக்கு முரணானது எனும் நிலைப்பாடு எழுகின்றது.
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியது. இது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். ஆனால் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பல விடயங்கள் இலங்கைச் சட்டத்தினடிப்படையில் எந்தளவு சாத்தியப்படும் என்பதை ஆராயவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.