சம்பள சர்ச்சைகளுக்கு முடிவில்லை!

229 0

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்கப்படல் வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு அமைந்தாலும், எல்லாம் முடிந்து விட்டது என தொழிற்சங்கங்கள் அமைதி காக்க முடியாது. ஏனென்றால் ஆயிரம் ரூபாய் கோரிக்கை என்பது ஏழு வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்டதாகும். அப்படியானால் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நாட்சம்பளம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதை தொழிற்சங்க பிரமுகர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஏழு வருடங்களுக்கு முன்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக விளங்கிய அமரர் ஆறுமுகன் தொண்டமான் இந்த ஆயிரம் ரூபாய் நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அது அடிப்படை சம்பளமா அல்லது அனைத்தும் அடங்கலாக ஆயிரம் ரூபாயா என்ற தெளிவுகள் எவருக்கும் இருக்கவில்லை. மேலும் ஏனைய கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முன் வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையாக இது இருந்ததால் இவ்விடயத்தில் இ.தொ.கா மாத்திரமே தனித்து இயங்க வேண்டியிருந்தது.

அந்நேரத்தில் வழமையாக இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும்  கூட்டு ஒப்பந்த   சம்பள அதிகரிப்பு வீதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு சம்பளத்தொகையாக இது இருந்த காரணத்தினால் முதலாளிமார் சம்மேளனமும் இதை பொருட்படுத்தவே இல்லை. ஆனால் கூட்டு ஒப்பந்தத்திலேயே நாட்சம்பளம் ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்ற இ.தொ.காவின் கோரிக்கை 7 வருடங்களுக்குப்பிறகு சம்பள நிர்ணய சபையின் பொறிமுறையின் மூலமே சாத்தியமாயிற்று.

எனினும் இ.தொ.காவின் தற்போதைய பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன், ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது மட்டும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இல்லை என்பதை கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்திருக்கின்றார்.

மட்டுமின்றி,   நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். ஆகவே மீண்டும் இந்த சம்பள விவகாரத்தை வைத்தே தொழிலாளர்களின் பிரச்சினைகள் பேசப்படப் போகின்றதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் சம்பள விடயத்துக்கு அப்பாற்பட்ட தொழிலாளர் சேமநலன்களை உறுதி செய்யும் கூட்டு ஒப்பந்தமானது அமரர் ஆறுமுகன் காலத்திலேயே கிடப்பில் போடப்பட்டு விட்டது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவே இல்லை. அதை தூசு தட்டி, காலமாற்றத்துக்கேற்ப சீர்திருத்தங்களை மேற்கொண்டிருந்தால், தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையில் எழும் முரண்களை பெரும்பாலும் குறைத்திருக்கலாம்.

சம்பள நிர்ணய சபையின் மூலம் தற்போது தொழிலாளர் வேதனம் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், தொழிலாளர் சேமநலன் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை செய்வதற்கு எந்த தடைகளும் இல்லை.   தொழிற்சங்கங்களுக்கும்  பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளுக்கும் இது நன்கு தெரியும். தொழிலாளர் நலன்களை உறுதி செய்யும் இந்த கூட்டு ஒப்பந்தத்துக்கும் சம்பள கூட்டு ஒப்பந்தத்துக்கும் தொடர்புகள் இல்லை. இது மூன்று வருடங்களுக்கொரு முறை செய்யப்படுவதாகும். ஆனால் அது குறித்து கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் அக்கறை கொள்ளவில்லை. இதுவே கம்பனிகளுக்கு மிகவும் சாதகமான அதே வேளை,அவர்களின் கைகள் ஓங்குவதற்கும் காரணமாயிற்று.

கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களில் இ.தொ.கா மாத்திரமே ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்குப்பின்னர் அது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய இரண்டு தொழிற்சங்க அமைப்புகளான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன,  தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் கலந்து கொண்டிருந்தாலும்  மூன்று தரப்பினரும் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வந்திருக்கவில்லை.

எனினும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.இராமநாதன் தொழிலாளர் சேமநலன் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக செய்ய வேண்டும் என ஊடக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதே வேளை  தே.தோ.தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக விளங்கும் வடிவேல் சுரேஷ் எம்.பி, பாராளுமன்றில் தொழிலாளரின் நாட்சம்பளம் 3,250 ரூபாயாக அதிகரிக்கப்படல்  வேண்டும் என எந்தவொரு அடிப்படைகளும் இன்றி பேசியிருந்தார். ஆக இப்போதும் கூட, தொழிலாளர் சம்பள விவகாரம் தீர்க்கப்படவில்லையென்பதும் அதை விட தொழிற்சங்க அமைப்புகள் தனித்தனியாகவே இவ்விடயத்தில் இயங்க விரும்புகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

தொழிற்சங்கங்கள் பிளவு பட்டிருக்கும் வரை கம்பனிகளின் காட்டில் அடை மழை தான். நியாயமான சம்பளம் என்ற விடயத்தை இ.தொ.கா முன்வைத்திருக்கின்றது. ஆனால் அதை எவ்வாறு சம்பள நிர்ணய சபையின் மூலம் பெறுவது என்ற பொறிமுறைப் பற்றி கூறவில்லை. ஆயிரம் ரூபாய்க்கே 7 வருட போராட்டம் என்றால் வடிவேல் சுரேஷ் எம்.பி கூறும் 3 ஆயிரம் ரூபாய்க்கு எத்தனை வருடங்கள் போராட வேண்டும்? ஆகவே இவ்விடயத்தில் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனையை ஏனைய இரு அமைப்புகளும் சீர்தூக்கி பார்த்தல் அவசியம்.

தற்போது தேயிலையின் சந்தை விலை அதிகரித்துள்ளது. ஆகவே அவர்களின் நலன் பேணும் கூட்டு ஒப்பந்தத்தை செய்வதன் மூலம் கம்பனிகளுக்கு நட்டம் வந்து விடப்போவதில்லை. அதை செய்வதற்கான அழுத்தங்களையும் பேச்சுக்களையும் ஆரம்பிக்க வேண்டியது தொழிற்சங்கங்களின் பிரதான கடமையாக உள்ளது. அதற்காக மூன்று தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்தரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். அதை செய்வார்களா?