பயங்கரமான நம்பிக்கைத் துரோகம்

240 0

இவ்வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தியமைத்தது.அந்த சட்டம் சர்வதேச நியமங்களை மீறுவதாக அமைந்திருந்தது என்பதை ஏற்றுக்கொண்ட அந்த அரசாங்கம் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் பற்றுறுதி கொண்டதாக தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பியது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களிடம் இருந்து வருகின்ற நெருக்குதல்களை தணிப்பதற்கு ஏதுவாக களம் அமைக்கப்ட்டது.ஆனால், அரசாங்கத்தின் திட்டங்கள் இப்போது திசைமாறிச் செல்வது போன்று தெரிகிறது.

 

பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் இருவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவுகளில் கைச்சாத்திடவேண்டாம் என்று மனிதஉரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் ( uN Special Rapporteur on Human Rights Defenders) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோள் இதைப் பியதிபலிக்கிறது.” அவர்களின் தடுப்புக்காவில் உத்தரவில் கைச்சாத்திடவேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.அவ்வாறு கைச்சாத்திட்டால் இலங்கைக்கு அது கரிநாளாக இருக்கும் ” என்று அவர் கூறினார்.தடுப்புக்காவல்  உத்தரவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழங்கப்படுவதே இதில் உள்ள முக்கியத்துவமாகும்.

 

தற்போது அரசாங்கத்தின் ஒரு உறுப்பினராக இல்லாத முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த பயங்கரவாத தடைச்சட்ட தவறான பயன்பாடு குறித்து கவலை வெளியிட்டிருக்கிறார்.சட்டம் பயங்கரவாதிகளைக் கையாளுவதற்கானது என்பதை அதன் பெயரே குறித்து நிற்கிறது.நியாயபூர்வமான ஜனநாயக நடவடிக்கையை பயங்கரவாதம் என்ற போர்வையின் கீழ் ஒடுக்கினால் அது கணிப்பிட முடியாத விளைவுகளைக் கொண்டுவரும் என்று பேராசிரியர் கூறியிருக்கிறார்.

” பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு அவசரமான  திருத்தங்களை பாராளுமன்றத்தில் நான் சமர்ப்பித்து நிறைவேற்றச்செய்தபோது விரிவான மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் வரை அது பயன்படுத்தப்பட மாட்டாது என்பதே தெளிவான புரிந்துணர்வாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.அவசரகாலநிலைப் பிரகடனத்தை காலாவதியாக அனுமதித்துவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்துவது முரண்பாடானதும் தவறான நோக்குடனானதுமாகும் என்றும் பேராசிரியர் எச்சரித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறுத்திவிடுவதாக உறுதியளித்துவிட்டு  அரசாங்கம் அதை பயன்படுத்துவது மக்களின் நம்பிக்கையை அல்ல பகைமையையே அரசாங்கம் சம்பாதிக்க வழிசெய்யும்.

 

பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற கொடிய சட்டங்களும் சட்டம் என்ற வரையறைக்குள்தான் வருகின்றன என்ற போதிலும் கூட சட்டத்தின் ஆட்சிக்குள் செயற்படுவதாக நியாயம் கற்பித்துக்கொண்டு போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக தோன்றுகிறது.ஒரு அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனமான நிலம் மற்றும் விவசாய சீர்திருத்தத்துக்கான இயக்கத்தின் தலைவரான சிந்தக்க ராஜபக்ச அண்மையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.அவரது கைது தன்னார்வ நிறுவனங்களை அரசாங்கம் இலக்கு வைக்க ஆரம்பித்திருக்கிறது என்பதன் அறிகுறியாகும்.

அரசாங்க சார்பற்ற தேசிய தன்னார்வ நிறுவனங்களின் செயலகத்தை வெளியுறவு அமைச்சின் செயற்களத்தில் இருந்து அரசாங்கம் ஏற்கெனவே பொதுப்பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றியிருக்கிறது.இது சிவில் சமூகத்தின் செயற்பாட்டுக்கான வெளியை சுருக்கும் நோக்கிலான நடவடிக்கையாகும்.அரசாங்கம் சிவில் சமூகத்தின் மீது நம்பிக்கை இழப்பது அது மக்களிடம் இருந்து தூரவிலகுகிறது என்பதன் அறிகுறியாகும்.இதனால் அரசியல் உறுதிப்பாடின்மையே ஏற்படும்.

 

பழைய ஆட்சி 

அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் பழைய ஆட்சி மீண்டு எழுகிறது என்பதன் அறிகுறியாகும்.முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவதற்கு திட்டமிட்டிருக்கிறார். அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்படவேண்டியவர்கள் என்று ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பிரேரிக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பட்டியல் அண்மைய போராட்ட இயக்கத்தின் விளைவாக ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை கணக்கெடுக்காததாக இருக்கிறது.

அந்த பட்டியலில் உள்ளவர்கள் அரச கட்டிடங்கள் முற்றுகையிடப்படுவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்படுவதற்கும் வழிவகுத்த படுமோசமான ஊழலுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிரான மக்கள் கிளர்ச்சியினால் பதவிகளில் இருந்து விரடடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.அரசாங்கத் தரப்பில் பழைய முகங்கள் மீண்டும் வருவதுடன் சமாந்தரமாக போராட்ட இயக்கமும் மீண்டெழும். ஆனால் இத்தடவை ஜே.வி.பி.தலைமையில் தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கமாக அது அமையும்.

தங்களது அயலகத்தில்  உள்ள துடிப்பான உறுப்பினர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு தன்னெழுச்சிய போராட்டக்களத்துக்கு வந்த ஆரம்ப தலைவர்கள் குறைந்தபட்சம் தற்போதைக்கு வெளியில் தலைகாட்டாமல் அமைதியாக இருக்கிறார்கள்.போராட்டத்தில் பங்கேற்று முன்னாள் ஜனாதிபதியின் பியர் குவளையை எடுத்தது, ஜனாதிபதியின் கதிரையில் இருந்தது போன்ற சிறிய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதால் தாங்களும் கைதுசெய்யப்படுவதை இந்த ஆரம்ப தலைவர்கள் விரும்பவில்லை.

அவர்களில் சிலர் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தற்போது இருக்கின்ற அரசியல்வாதிகளில் நேர்த்தியான ஒருவராகவும் நகர்புற நாகரிக பாங்குடையவராகவும் மதிக்கிறார்கள். வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுத்து தங்கள் வாழ்வில் மீண்டும் மேம்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒருவராக ஜனாதிபதியை அவர்கள் நோக்குகிறார்கள்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான சர்வதேச ஆதரவை பெறுவதாக ஒரு எண்ணத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது.சர்வதேச நாணய நிதியம் அடுத்த கட்ட அலுவலர் மட்ட பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவிருக்கிறது.நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தனது நாட்டின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்திருக்கிறார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.இலங்கையின் சர்வதேச கடன்கள் மீளாய்வுசெய்யப்படக்கூடியதாக உதவிவழங்கும் நாடுகளின் சர்வதேச மகாநாடொன்றைக் கூட்டுவதற்கு ஜப்பானை விக்கிரமசிங்கவினால் இணங்கவைக்கக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதனால் நாட்டு மக்களில் வசதி குறைந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த கவலையை அரசாங்கம் வெளிக்காட்டியிருக்கிறது.

ஆனால் , பொதுமக்களைப் பொறுத்தவரை நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது.விலைவாசியில் குறைப்புச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் மின்கட்டணம் 75 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமை, மண்ணெண்ணெய் விலை  கிட்டத்தட்ட 400 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகளினால் பயனற்றுப் போகிறது.இந்த கடுமையான அதிகரிப்புகள் நாட்டின் எஞ்சிய  பொருளாதாரத்தின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன.நிலைவரம் தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டு போகுமேயானால் மீண்டும் போராட்டங்கள் மூளுவதற்கான சாத்தியம் இருக்கிறது.

முன்னைய அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகின்றவர்களுக்கு நட்டஈட்டை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்குமானால் ஆர்ப்பாட்டங்கள் கடும் வேகத்துடன் முன்னெடுக்கப்படலாம்.அண்மைய தீவைப்புகளின்போது வீடுகளை இழந்த அரசாங்க உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க உறுதியளித்திருக்கிறார்.அந்த வீடுகளின் பெறுமதி அந்த உறுப்பினர்களின் பகிரங்கமாக தெரிந்த வருமான மூலங்களையும் விட அதிகமானது என்கிற போதிலும் ஈட்டஈட்டு உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கிறது.

  முட்டாளின் சொர்க்கம்

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை சாத்தியமானால் முளையிலேயே கிள்ளிவிடவும் அவசியமானால் அரச பாதுகாப்பு  படைகளை கட்டவிழ்த்துவிடவும் தயாராயிருப்தாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வெளிக்காட்டியிருக்கிறது.

கொழும்பு காலிமுகத்திடலில் பிரதான போராட்ட களத்தை பலவந்தமாக நிர்மூலம் செய்ததுடன் ஜனநாயக உரிமைகளின் அடிப்படையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்ததன் மூலம் போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்கு தயார் நிலையில் இருப்பதை ஏற்கெனவே அரசாங்கம் வெளிக்காட்டியிருக்கிறது. வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்களைக் கூட அரசாங்கம் கைதுசெய்கிறது.

பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி நாட்டில் நிலவுகின்ற போதிலும், வைத்தியசாலைகளில் மருந்துவகைகள் உட்பட நேரடியான சமூக நலன்புரி நோக்கங்களுக்கான வளங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும் பாதுகாப்பு படைகளின் தேவைகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் அரசாங்கம் மீண்டும் முன்னுரிமை கொடுத்திருக்கிறது.

பாதுகாப்பு படைகளைப்  பயன்படுத்தி போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்கும் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பவர்களைை அச்சுறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சிகள்  இப்போது சர்வதேச ரீதியாக கண்டனத்துக்குள்ளாகின்றன. சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு போன்ற சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் அரசாங்கத்தை கடுமையாக கண்டனம் செய்திருக்கின்றன.

ஆனால், அரசாங்கமோ பழைய ஆட்சியை மீள நிறுவும் அதன் வெளிப்படையான பிரயத்தனத்தில் இந்த கண்டனங்களுக்கெல்லாம் காதுகொடுப்பதற்கான நாட்டத்தைக் காட்டவில்லை.ஆனால் இது தேசிய நலன்களுக்கு பாதகமானதாக அமையக்கூடும்.ஆட்சிமுறையில் மனித உரிமைகள் நியமங்களைப் பின்பற்றி நடந்தால் இலங்கைக்கு தங்களது ஆதரவை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் ஐரோப்பிய ஒன்றியமும் ( ஜி.எஸ்பி.பிளஸ் வரிச்சலுகை) முன்வந்திருக்கின்றன.

சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் ஆட்சேபங்களை அலட்சியம் செய்வதற்கு அரசாங்கம் தற்சமயம் தயாராயிருக்கிறது போன்று தெரிகிறது.இந்த சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற இலங்கையின் அரசியல் தலைமத்துவத்துக்கு எதிராக கடுமையான தடைகளை விதிப்பதற்கு ஆதரவைத் திரட்டுவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

இலங்கையின் துறைமுகம் ஒன்றுக்கு சீனப் போர்க்கப்பல் வந்தது தொடர்பிலான அண்மைய சர்ச்சை சர்வதேச கவனத்தை கணிசமானளவுக்கு பெற்றிருக்கிறது.சீனாவின் செல்வாக்கு வலயத்தின் ஒரு அங்கமாக இலங்கை வருவதை மேற்குலக நாடுகளும் ஜப்பானும் இந்தியாவும் விரும்பவில்லை.

சர்வதேச சமூகத்தின் கணிப்பீட்டில் மனித உரிமைகளை விடவும் புவிசார் அரசியலே முக்கியத்துவம் பெறும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது என்பதன் அறிகுறியே மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச அமைப்புக்களினால் தெரிவிக்கப்படுகின்ற ஆட்சேபங்கள் பற்றிய அதன் அலட்சியமாகும். அடுத்த மாத முற்பகுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடர் யார் முட்டாளின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்பதற்கான அறிகுறியைக் காட்டும்.

கலாநிதி ஜெகான் பெரேரா