சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமானோரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்

105 0

புதிய அமைச்சரவை நியமிக்கும்போது ஊழல் மோசடி, செயற்திறமை மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற விடயங்களுக்கு முகம்கொடுக்க முடியுமானவர்ளை நியமிக்க முன்னுரிமை வழங்கவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் அரசியல் இருப்பை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு செயற்பட்டால் ஒட்டுமொத்த நாடு அழிவுப்பாதைக்கு செல்வதை தடுக்க முடியாமல்போகும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவை நியமினம் தொடர்பாக பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளாது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிப்பது தொடர்பாக நாட்டுக்குள் பாாியளவில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப்பதவி ஏற்றுக்கொள்வது தொடர்பாக தங்களின் விருப்பத்தை தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் சில அரசியல் கட்சிகள் அமைச்சு பதவி வழங்கப்படவேண்டிய தங்களின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்திருப்பதாக  செய்தி வெளியாகி இருக்கின்றது.

இலங்கை தற்போது பாரிய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஆளாகி இருப்பதனால், நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டுசெல்ல, அமைக்க இருக்கும் அமைச்சரவையின் நடவடிக்கைகள் மிகவும் தீர்மானமிக்கதாகும்.

அதேபோன்று தேசிய மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கை மற்றும் நற்பெயரை கட்டியெழுப்புதற்கும் இந்த நியமனம் முக்கியமானதாகும்.

மேலும் கடந்த சில மாதங்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய ஊழல், மோசடி, செயற்திறமை, பலவீனமான முகாமைத்துவம், சட்டத்தின் ஆட்சி போன்ற விடயங்களுக்கு முகம்கொடுக்க முடியுமானவர்களை அமைச்சரவைக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி என்றவகையில் உங்களின் முதன்மை பொறுப்பாகும்.

இதன்போது அரசியல் சாதகம் மற்றும் அரசியல் இருப்பை அடிப்படையாக்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த நாடும் அழிவைநோக்கி பயணிப்பதை தடுக்க முடியாமல்போகும்.

அத்துடன்  அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை நியமிக்கும்போது, அதன் எண்ணிக்கை 20க்கு மேற்படாதவகையில் வரையறுக்கவேண்டும்.  அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் அத்தியாவசிய செலவுகள் தவிர ஏனைய செலவுகளை இல்லாமலாக்கவேண்டும்.

மேலும் பல்வேறு ஊழல் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுக்கள் உடைய, மக்களின் அதிருப்திக்கு ஆளாகியவர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாது.

அதேபோன்று பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியுமான, சர்வதேச நாடுகளின் நம்பிக்கை மற்றும் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமான மற்றும் இலங்கை மக்களின் நம்பிக்கையை வெற்றிகொண்டுள்ளவர்களை அமைச்சுப்பதவிக்கு  தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று நியமிக்கப்படும் அமைச்சு விடயதானங்கள் தொடர்பான அடிப்படை அறிவு இருப்பவர்களையே குறித்த அமைச்சுக்களுக்கு நியமிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.