ஜனநாயகத்தை முடக்கும் அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் தோல்வியடைச் செய்ய வேண்டும்

166 0

பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் ஜனநாயகத்தை முடக்கும் அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் தோல்வியடைச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இனிவரும் காலங்களில் மக்கள் சந்திப்புக்களை நடத்துவதைக் கூட பயங்கரவாதம் எனக் கூறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தேர்தல் தொகுதிக் கூட்டம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச மனித நேய அமைப்பு இலங்கையில் 57 இலட்சம் மக்களுக்கு மனிதநேய உதவிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 63 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையிலுள்ளதாகவும் , 68 இலட்சம் மக்கள் போதுமான உணவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலும் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தாய்மாரும் , குழந்தைகளும் தமக்கு தேவையான உணவைக் கூடி பெற்றுக் கொள்ள முடியாமலுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சுப்பதவிகளுக்கான பெயர்ப்பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. தற்போது நாட்டிலுள்ள பிரதான பிரச்சினை அமைச்சுப்பதவிகளுக்கான கதிரைகளை நிரப்புவதா?

இதன் மூலம் உணவு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியுமா? தற்போது அமைச்சுப்பதவிகள் ஏலத்தில் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. ஆனால் தேவையானளவு எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது. இது இவ்வாறிருக்க மறுபுறம் பயங்கரவாத தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் அடங்குமுறைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார். இது தொடர்பில் சர்வதேசம் அவதானம் செலுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் தற்போது முற்றாக இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மக்கள் சந்திப்புக்களை நடத்துவதைக் கூட பயங்கரவாதம் எனக் கூறுவார்கள். ஒருபுறம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி , மறுபுறம் அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார். பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் ஜனநாயகத்தை முடக்கும் அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் தோல்வியடைச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.